Published : 21 Sep 2025 12:28 AM
Last Updated : 21 Sep 2025 12:28 AM

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2023-ம்ஆண்டுக்கான விருது நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நடிகர் மோகன்லாலின் தனித்துவமான திறமை, நிபுணத்துவம், கடின உழைப்பு ஆகியவை இந்திய திரைத்துறை வரலாற்றில் அவருக்கு சிறந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய திரைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, மோகன்லாலுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு, நடிகர் சிவாஜி கணேசன், அடூர் கோபாலகிருஷ்ணன், கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராஜ் கபூர் உள்ளிட்டோர் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளனர்.

மலையாள நடிகரான மோகன்லால், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 360 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது ‘விருஷபா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. மோகன்லாலுக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x