Published : 13 Sep 2025 08:28 AM
Last Updated : 13 Sep 2025 08:28 AM

நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகை ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து சில நாட்களுக்குள், அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவர் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்துக் கோரி பிரசாந்த், மனு தாக்கல் செய்தார்.

இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு தனது கணவர் பிரசாந்த், ஹன்சிகா, அவர் தாயார் மோனா ஆகியோர் மீது, தன்னை சித்தரவதை செய்ததாக மும்பை அம்பாலி போலீஸில் குடும்ப வன்முறை புகார் கொடுத்தார், முஸ்கான். மூவரும் தன்னிடமிருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கேட்பதாகவும் கணவருடன் வாழ விருப்பம் தெரிவித்தும்கூட, அதற்கு ஹன்சிகாவும் அவர் தாயாரும் தடையாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து ஹன்சிகா உள்ளிட்டோர் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஹன்சிகா உள்ளிட்டோர் ஜாமீன் பெற்றனர்.

இதையடுத்து, தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி ஹன்சிகா, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. விசாரணையை தொடரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x