Published : 01 Sep 2025 08:47 AM
Last Updated : 01 Sep 2025 08:47 AM

லோகா: திரை விமர்சனம்

பெங்களூருவில் தனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் வசிக்கிறார், சன்னி (நஸ்லென்). எதிர் வீட்டுக்கு புதிதாக வரும் சந்திராவை (கல்யாணி பிரியதர்ஷன்) கண்டதுமே காதல் கொள்கிறார். அவருடன் பழகுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, வழக்கத்துக்கு மாறான அமானுஷ்யங்களைக் கொண்ட பெண் என்பது தெரியவருகிறது. இதற்கிடையே உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டி வருகிறது சந்திராவுக்கு. சந்திரா யார்? அவருடன் இருப்பவர்கள் யார்? அவரிடம் இருக்கும் அமானுஷ்யம் என்ன? என்பது கதை.

தொன்மக் கதை ஒன்றை நவீனத்துடன் இணைத்து, பேன்டஸி அட்வென்சர், சூப்பர் ஹீரோ கதையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டொம்னிக் அருண். அதனால், லாஜிக் விஷயங்களை விட்டுவிட்டு கதையை, நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுக்க முயன்றிருக்கும் அவருடைய திரை எழுத்தை இன்னும் கூர்மையாக்கி இருக்கலாம்.

ஏலியன்ஸ் உள்ளிட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் பற்றி, ஹாலிவுட் படங்கள் நிறைய பேசியிருந்தாலும் தொன்மக் கதையின் பின்னணியில் இப்படியொரு கதையை சொல்லியிருப்பது புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. அதற்கான விளக்கத்துக்கு வருகிற பிளாஷ்பேக் நீலி கதையை, நம்பும்படியாக கொடுத்திருக்கிறார்கள்.

நண்பர்கள், பார்ட்டி, உடல் உறுப்புகள் திருடும் கும்பல் என செல்லும் முதல் பாதியில் சந்திரா, மர்மமானவர் என்பது தெரிந்த பிறகு, கதை விறுவிறுப்பாகிறது. அதற்கு ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் காரணம். ஒரு வித பயத்துடனும் ஏதோ நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்புடனும் கதைக்குள் இழுத்துப் போக வைக்கிறது இசை.

தொழில்நுட்ப ரீதியாக மிரட்டும் இந்தப் படத்தில் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு தனித்துவமாகத் தெரிகிறது. திரைக்கதை சில இடங்களில் தொய்வடையும் போது, அதைக் கவனிக்க விடாமல் கதையோடு இழுத்துச் செல்லும் முயற்சிக்கிறது சாமன் சாக்கோவின் படத்தொகுப்பு.

சூப்பர் ஹீரோவாகவும் மர்ம பெண்ணாகவும் தனது உடல்மொழியில் வித்தியாசம் காட்டி, மிரட்டியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது வேகம் பிரமிக்க வைக்கிறது. மொத்தக் கதையும் அவரைச் சுற்றிதான் என்பதால், அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்து நாச்சியப்பாவாக வரும் சாண்டி மாஸ்டருக்குத்தான் கதையில் முக்கியத்துவம். அவர் தோற்றமும் நடிப்பும் நெகட்டிவ் கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறது. அப்பாவியாக, பயந்துகொண்டே கல்யாணியுடன் செல்பவராக வரும் நஸ்லென், அவர் நண்பர்கள் அருண் குரியன், சந்து சலீம் குமார் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். படத்தில் சில ஆச்சரிய 'கேமியோ'க்களும் உண்டு.

இதுபோன்ற சூப்பர் ஹீரோ கதைகளில் நெகட்டிவ் கதாபாத்திரம் வலுவானதாக எழுதப்பட்டிருக்கும். அது இதில் மிஸ்சிங். கல்யாணி எதற்காக பெங்களூரு வருகிறார், அவர் நோக்கம் என்ன என்பது போன்ற பல விஷயங்களுக்கு விளக்கம் இல்லை. அடுத்த பாகத்தில் சொல்வார்களோ, என்னவோ? இருந்தாலும் இந்தச் சந்திரா கவர்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x