Last Updated : 28 Aug, 2025 08:28 AM

 

Published : 28 Aug 2025 08:28 AM
Last Updated : 28 Aug 2025 08:28 AM

ஐ.டி. ஊழியரை தாக்கிய விவகாரம்: லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை

திருவனந்தபுரம்: கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சுகுரியன் தாமஸ், வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை லட்சுமி மேனனை கைது செய்ய கூடாது என நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த மனு மீதான விசாரணை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

லட்சுமி மேனன் மீதான புகார் என்ன? - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனன் உடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸார், ‘நடிகை மற்றும் மூன்று பேர், ஐ.டி ஊழியர் மற்றும் நண்பர்களின் காரைப் பின்தொடர்ந்து பாலத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஐ.டி ஊழியரை வலுக்கட்டாயமாக தங்கள் காரில் இழுத்து வேகமாக ஏற்றினர். இதனையடுத்து பரவூரில் உள்ள வெடிமாரா சந்திப்பில் இறக்கிவிடப்படும் வரை அவர்கள் ஐ.டி ஊழியரை காரில் வைத்து கடுமையாக தாக்கினர்" என்று தெரிவித்தனர். இந்த நிலையில்தான் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x