Published : 31 Jul 2025 07:51 AM
Last Updated : 31 Jul 2025 07:51 AM

‘பான் இந்தியா’ படங்களில் வில்லன் ஆகும் ஹீரோக்கள்!

டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாவதால் ‘ஹீரோ - வில்லன்’ இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. ஒரு மொழியில் நடிக்கும் ஹீரோ மற்ற மொழியில் வில்லனாக நடிப்பதை, இப்போது விரும்பி ஏற்கின்றனர். ஹீரோவுக்கு இணையான, வலுவான வில்லன் என்று இயக்குநர்கள் தேடத் தொடங்குவதும் இதற்குக் காரணம்! பெரும் பட்ஜெட்டில் உருவாகும் ‘மல்டி ஸ்டார்’ படங்களுக்கு அது தேவையாகவும் இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் இமேஜ் பற்றி கவலைப்பட்ட ஹீரோக்கள், இப்போது அதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெகட்டிவ் கதாபாத்திரங்களைத் தாராளமாக ஏற்கத் தொடங்கிவிட்டனர். இது புதிதில்லை என்றாலும் இப்போது அந்த நடைமுறை அதிகரித்து வருகிறது. ‘பாகுபலி’க்கு பிறகுதான் இந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அதுவரை ஹீரோவாக நடித்து வந்த ராணா அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் பேசப்பட்டது.

விக்ரம் படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். ‘மாஸ்டரி’ல் பவானியாகவும் ‘ஜவானி’ல் காளியாகவும் நெகட்டிவ் அவதாரம் எடுத்தார் விஜய் சேதுபதி. ஹீரோவாக அவர் நடிப்பு பேசப்பட்டிருந்தாலும் நெகட்டிவ் கேரக்டரில் அவர் கதாபாத்திரம் இன்னும் ரசிக்கப்பட்டது. அப்படித்தான் ‘கல்கி 2829 ஏடி’ படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார்.
அவருடைய முழு வில்லன் அவதாரம் அதன் அடுத்தப் பாகத்தில் தெரியும் என்கிறது படக்குழு.

தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற ‘புஷ்பா 2’ படத்தில் ஃபஹத் பாசில் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்திப் படமான ‘அனிமல்’, பாபி தியோலை வில்லனாக்கியது. அவர் அடுத்து சூர்யாவின் ‘கங்குவா’வில் நடித்தார். இப்போது விஜய்யின் ‘ஜனநாயகனி’ல் நடித்திருக்கிறார். பிருத்விராஜ், ‘சலார்’ படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருக்கிறார். 'சலார் 2'-வில் அவருடைய முழு வில்லத்தனத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள்.

சைப் அலி கான் ‘தேவரா’விலும் சஞ்சய் தத் ‘கேஜிஎப் 2’, ‘லியோ’ படங்களிலும் ‘நெகட்டிவ்’ கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த நிலையில், ‘வார் 2’ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் ஆவேசமாக மோதி இருக்கிறார் ஜூனியர் என்டிஆர். ‘ராமாயணம்’ படத்தில் யாஷ், ராவணனாக நடித்து வருகிறார்.

தனுஷின் ‘இட்லி கடை’யில் அருண் விஜய் வில்லன். இவர் ஏற்கெனவே அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'யில் ரவி மோகன் வில்லனாகிறார். சில படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, இப்போது ஹீரோவாக திரும்பி இருக்கிறார்.

வழக்கமாக வில்லன்களுடன் மோதி போரடித்த ஹீரோக்களுக்கு தாங்களே வில்லனாவது, வேறொரு விதமான நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைகிறது.

ரஜினிகாந்தின் ‘கூலி’ உள்பட பல படங்களில் ‘மல்டி ஸ்டார்கள்’ நடிப்பதால் அவர்களின் கதாபாத்திரங்களை வலுவாக எழுத வேண்டிய பொறுப்பு ‘ஸ்கிரிப்ட் ரைட்டர்களு’க்கும் இருக்கிறது. இது பார்வையாளர்களுக்குப் புதுவித ரசனையைத் தரும் நேரத்தில், தயாரிப்பாளர்களுக்கு ‘பைசா வசூலா’கவும் அமைந்து விடுகிறது என்கிறார்கள்.

இதற்கிடையே நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு, ‘குறைந்த கால்ஷீட், அதிக சம்பளம்’ நடைமுறையை சில ஹீரோக்கள் பின்பற்றுவதால் இது போன்ற கதாபாத்திரங்களை அவர்கள் விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x