Published : 30 Jul 2025 02:11 PM
Last Updated : 30 Jul 2025 02:11 PM
‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை யூ-டியூப்பில் வெளியிடவுள்ளார் ஆமிர்கான். இதனை 100 ரூபாய் கட்டி காணலாம்.
ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. தானே தயாரித்து வெளியிட்ட இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று முன்பே கூறியிருந்தார் ஆமிர்கான். தற்போது இப்படத்தினை யூ-டியூப் தளத்தில் வெளியிடவுள்ளார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், இப்படத்தை பார்க்க முடியும்.
இந்த புதிய முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை யூடியூப்-இல் மட்டுமே பார்க்க முடியும், வேறெந்த ஓடிடி தளத்திலும் காண முடியாது. இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பணம் கட்டி யூ-டியூப் தளத்தில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.100 விலையிலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட 38 சர்வதேச நாடுகளில், அவர்கள் நாட்டின் சந்தைக்கேற்ற விலையிலும் காணக் கிடைக்கும்.
இந்த புதிய முயற்சி குறித்து ஆமிர்கான், “கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் போராடி வருகிறேன். இறுதியாக அதற்கு மிக சரியான நேரம் வந்துவிட்டது. நமது அரசாங்கம் யுபிஐ-ஐ கொண்டு வந்தவுடன், மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது. மேலும் பெரும்பாலான சாதனங்களில் யூ-டியூப் இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாக சென்றடைய முடியும். சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.
இந்த யோசனை வெற்றி பெற்றால், புவியியல் மற்றும் பிற தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க குரல்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும். சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான வெற்றியாக பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஆமிர்கான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT