Published : 23 Jul 2025 06:52 AM
Last Updated : 23 Jul 2025 06:52 AM
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய பிராண்ட் ஒன்றை அவர் ஆரம்பித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
அழகு மற்றும் வாசனை திரவிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிசிஏ குழுமத்துடன் இணைந்து அவர் இதைத் தயாரிக்கிறார். ‘டியர் டைரி’யின் ஆரம்ப தொகுப்பில், ‘நேஷனல் க்ரஷ்’, ‘இன்ரிபிளேசபிள்’, ‘கான்ட்ரவர்சியல்’ ஆகிய தனித்துவமான 3 வாசனை திரவியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, “என் வாழ்க்கையில் வாசனை திரவியம் முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. அது தொடர்பான தொழிலைத் தொடங்கி இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கும் அதே நேரம் பதற்றமாகவும் உணர்கிறேன். இந்த நிறுவனத்துக்கு உங்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகைகள் சிலர் அழகு சாதன பொருட்களில் முதலீடு செய்துள்ளனர். நடிகை நயன்தாராவும் ‘ஸ்கின்’ என்ற அழகு சாதன நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர்களுடன் ராஷ்மிகாவும் இப்போது இணைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT