Published : 14 Jul 2025 09:21 AM
Last Updated : 14 Jul 2025 09:21 AM
பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கங்கிபாடுவை சேர்ந்தவர், கோட்டா சீனிவாச ராவ். வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த அவர், நாடகங்களிலும் நடித்து வந்தார். 1978-ம் ஆண்டு ‘பிராணம் கரீடு’ என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அங்கு ஏராளமான படங்களில் வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள அவரை இயக்குநர் ஹரி, விக்ரம் நடித்த ‘சாமி’ படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார். அதில் அவருடைய 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது.
தொடர்ந்து தெலுங்கு, தமிழில் நடித்து வந்தார். தமிழில் திருப்பாச்சி, ஏய், சத்யம், சகுனி, தாண்டவம், மரகதநாணயம், சாமி 2 என பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்பட சுமார் 750 திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ், 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு தொகுதி, சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2015-ம் ஆண்டு அவருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.
ஹைதராபாத் பிலிம் நகரில் வசித்து வந்த அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை காலமானார். அவர் மறைவுக்கு தமிழ், தெலுங்கு திரையுலகினர் மற்றும் ஆந்திர அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த கோட்டா சீனிவாச ராவுக்கு ருக்மணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவர் மகனும் நடிகருமான கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத், கடந்த 2010-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கமல்ஹாசன் இரங்கல்: கல்லூரிக் காலத்தில் நாடகங்களில் நடிப்பதில் தொடங்கியவர் கோட்டா சீனிவாச ராவ். அந்த ஆர்வத்தை மங்கவிடாமல் காத்து, திரையில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் மின்னிய நட்சத்திரமாக உயர்ந்தார். கலை உலகில் இடைவிடாமலும் நிறைவாகவும் பணிபுரிந்தவர் நிறைவடைந்திருக்கிறார். மூத்த திரைக் கலைஞருக்கு என் இரங்கல்கள், அவர்தம் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT