Published : 08 Jul 2025 08:34 AM
Last Updated : 08 Jul 2025 08:34 AM
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. இவர், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, ராஜமவுலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் மகேஷ்பாபு இருந்து வருகிறார். அவர் வரும் விளம்பரத்தைப் பார்த்து, பாலாபூர் என்ற பகுதியில் மனை வாங்க, பெண் மருத்துவர் ஒருவர், ரூ.34.8 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் கூறிய இடத்தில் அந்த நிலத்தைத் தர மறுத்துவிட்டனர்.
இதனால் செலுத்திய பணத்தை மருத்துவர் திருப்பிக் கேட்டபோது, தவணை முறையில் ரூ.15 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மருத்துவர், நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர், நடிகர் மகேஷ்பாபு உள்பட 3 பேர் மீது வழக்கு பதிந்த நுகர்வோர் ஆணையம், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பண மோசடி வழக்கில் மகேஷ் பாபுவை அமலாக்கத்துறை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT