Last Updated : 25 Jun, 2025 08:04 AM

 

Published : 25 Jun 2025 08:04 AM
Last Updated : 25 Jun 2025 08:04 AM

பிரபல வீடியோ கேமில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ - ரசிகர்கள் உற்சாகம்

உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய வீடியோ கேம் ஆன ‘டெத் ஸ்ட்ராண்டிங் 2’-வில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ இடம்பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

’பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமாகி விட்டார் ராஜமவுலி. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் பெற்ற பிறகு ராஜமவுலியின் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கி விட்டன. ஹாலிவுட் ஜாம்பவன்கள் பலரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பார்த்துவிட்டு ராஜமவுலியை சமூக வலைதளங்களில் புகழ்ந்தனர்.

இந்தச் சூழலில், உலக அளவில் புகழ்பெற்ற ‘டெத் ஸ்ட்ராண்டிங்’ வீடியோ கேமின் இரண்டாம் பாகம் நாளை (ஜூன் 26) உலகமெங்கும் வெளியாகிறது. இந்த கேமுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், முன்பதிவு அடிப்படையில் சிலருக்கு மட்டும் இந்த கேம் வழங்கப்பட்டது. இதனை விளையாடிய ரசிகர்கள் இதில் ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயாவின் கேமியோ இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.

இந்த கேமை உருவாக்கிய ஜப்பானைச் சேர்ந்த கொஜிரோவை கடந்த 2022-ஆம் ஆண்டு ’ஆர்ஆர்ஆர்’ விளம்பரப் பணிகளின்போது ராஜமவுலி சந்தித்தார். அப்போது கொஜிரோவின் 360⁰ ஸ்டுடியோவை ராஜமவுலி பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்களை கொஜிரோ அப்போது தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா உடனான புகைப்படத்தை கொஜிரோ தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் ‘டெத் ஸ்ட்ராண்டிங் 2: ஆன் தி பீச்’ வீடியோ கேமில் ‘தி அட்வென்சரர்’ என்ற பெயரில் ராஜமவுலியும், ‘அட்வென்சரர்’ஸ் சன்’ என்ற பெயரில் கார்த்திகேயாவும் கேமியோ செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x