Published : 23 Jun 2025 12:01 PM
Last Updated : 23 Jun 2025 12:01 PM
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. வரும் ஜூலை 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக பவன் கல்யாண் பேட்டியொன்று அளித்திருக்கிறார்.
அப்பேட்டியில் இந்திய திரையுலகம் குறித்து பேசியிருக்கிறார் பவன் கல்யாண். அதில் இந்தி திரையுலகை கடுமையாக சாடியிருக்கிறார். அதில், “ஒவ்வொரு திரைப்படத் துறைக்கும் அதன் சொந்த தனித்துவமான பலம் இருப்பதாக நினைக்கிறேன். இந்திய சினிமா என்ற வார்த்தையை விரும்பவில்லை. அதன் ஒரு பகுதி எனக்கு அந்நியமாக இருக்கிறது. எனக்கு, அது பாரதிய சித்ரா பரிஷ்ரமம்.
இந்தியத் திரைப்படத் துறை தொடங்கியபோது, அது நமது கலாச்சாரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களால் அது மாறியது. குறிப்பாக இந்தி சினிமா உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு, கலாச்சார ரீதியாக இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களை கேலி செய்யும் சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. இப்போதெல்லாம், தென்னிந்திய படங்கள் இந்திய கலாச்சாரத்தை அதிகமாகப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இந்தி சினிமாவில் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ‘தங்கல்’ படத்தைப் பார்த்தால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இது நமது கலாச்சாரத்துடன் ஆழமான தொடர்புடைய படம். அந்த வகையான சினிமா இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. பணம் மற்றும் வணிக அம்சங்களைத் துரத்துவதன் மூலம், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பூர்வீக பார்வையாளர்களுடனான தொடர்பை இழந்தனர்.
ஆனால், தெற்கில் பெரும்பாலான பார்வையாளர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். தெற்கின் 70-80% சந்தை கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். எனவே, தெரிந்தோ தெரியாமலோ, நமது படங்களில் அந்த கலாச்சார ரீதியான கிராமப்புற தொடர்பு பிரதிபலிக்கும். அதனால்தான் மேற்கத்திய ஊடகங்களில் அது எதிரொலிக்கிறது” என்று பேசியிருக்கிறார் பவன் கல்யாண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT