Published : 22 Jun 2025 07:25 AM
Last Updated : 22 Jun 2025 07:25 AM
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் நீரஜ் (ஜிம் சர்ப்). அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ரூ.50 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுப்பதற்காக, முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை ( நாகார்ஜுனா) அணுகுகிறார். அந்த பணத்தை பிச்சைக்காரர்களை பினாமிகளாக மாற்றி, அவர்கள் மூலம் கொடுக்க, தீபக் ஐடியா கொடுக்கிறார். அதற்காக 4 பிச்சைக்காரர்களைத் தேர்வு செய்கிறார்கள். அதில் திருப்பதியில் இருக்கும் தேவாவும் (தனுஷ்) ஒருவர். பணம் கை மாறியதும் பினாமிகளை கொல்லும் நீரஜ் ஆட்களிடமிருந்து தேவா மட்டும் தப்பிக்கிறார். அவரைத் தேடி நீரஜ் ஆட்கள் அலைகிறார்கள். இந்த ஓட்டத்தில் சமீராவின் (ராஷ்மிகா மந்தனா) உதவி தேவாவுக்கு கிடைக்கிறது. தேவா தப்பித்தாரா, இல்லையா? சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் நீரஜ், தீபக் என்ன ஆனார்கள் என்பது கதை.
பிச்சைக்காரர்களை பினாமிகளாக மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் அதிகார வர்க்கத்தினர் பற்றிய ஒன் லைனை, இயக்குநர் சேகர் கம்முலா சுவாரஸியமாகத் தர மெனக்கெட்டிருக்கிறார். இயற்கை வளத்தை அரசியல்வாதிகளும், கார்ப்பரேட்டுகளும் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர். தன் நலனுக்காக யாரையும் வளைக்கலாம், எவரையும் கொல்லலாம், அவர்களுக்கு அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் எப்படியெல்லாம் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை மிகையில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக எளிய மனிதர்களைக் கையாளும் விதம் பதைபதைக்க வைக்கிறது. முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகம் வழியாகவே கதை நகர்கிறது. அதை இன்னும் துல்லியமாக செய்திருக்கலாம்.
பணம் கைமாறியதும் பிச்சைக்காரர்களைக் கொல்வார்கள் என்றதுமே, நாயகன் தனுஷ் தப்பிவிடுவார் என்பதை எளிதாக ஊகிக்க முடிகிறது. இங்கு திரைக்கதை சூடுபிடித்து இருக்க வேண்டும். ஆனால், நாயகன் பிச்சைக்காரர் என்பதால் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல் இயக்குநர் கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால், அதுவே படத்தை மெதுவாகவும் மாற்றிவிடுகிறது.
சிபிஐ அதிகாரி தீபக், திறமையான, நுட்பமாகச் செயல்படக் கூடியவர் என்பதை நிரூபிக்க, சில காட்சிகளையாவது வைத்திருக்கலாம். ஊர், பெயர் தெரியாத பிச்சைக்காரரை, இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் பிடிக்க முடியாமல் தள்ளாடுவது ஏற்கும்படி இல்லை. ராஷ்மிகா மந்தனா கதைக்குள் வருவது கச்சிதமாக சொல்லப்பட்டிருந்தாலும் அவர் பின்னாலேயே தனுஷ் சுற்றிக் கொண்டிருப்பது, அவர் தொடர்ந்து சிக்கலில் மாட்டினாலும் உதவி செய்வது போன்றவை அலுப்பூட்டுகின்றன. படம் 3 மணி நேரம் ஓடுவது அயற்சியை உண்டாக்குகிறது. குறைந்தபட்சம் அரை மணி நேரத்தை வெட்டித் தள்ளும் அளவுக்கு காட்சிகள் உள்ளன. என்றாலும் தனுஷை துரத்தும் வில்லன் கும்பல், அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடும் தனுஷ், இடையில் மாட்டிக் கொள்ளும் ராஷ்மிகா, குற்ற உணர்வால் தவிக்கும் நாகார்ஜுனா எனக் கதையில் சுவாரஸியம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர்.
படத்தின் மிகப் பெரிய பலம் தனுஷ். பிச்சைக்காரராகத் தொடக்க காட்சியிலேயே மிரட்டி அப்ளாஸ் வாங்குகிறார். பிச்சைக்காரராகவும் பணக்காரராகவும் நடிக்கும் இடத்தில் கச்சிதமான உடல்மொழி. அனுபவ நடிப்பில் கவர்கிறார் நாகார்ஜுனா. மாட்டிக் கொண்டு புலம்பவது, அப்பாவித்தனமான நடிப்பின் மூலம் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார் ராஷ்மிகா மந்தனா. பணக்காரருக்குரிய உடல் மொழியுடன் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார், ஜிம் சர்ப். கே. பாக்யராஜ், சுனைனா, சாயாஜி ஷிண்டே,ஜெயப்பிரகாஷ், தலிப் தஹில் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில், ’போய் வா நண்பா’, ‘என் மகனே’ ஆகிய பாடல்கள் மனதில் நிற்கின்றன. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் மும்பையின் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீநிவாஸ் நீளமான காட்சிகளிலும், இரண்டாம் பாகத்திலும் கத்திரி போட மறந்துவிட்டார். திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கல்கள் இருந்தாலும் இந்தப் படத்தை ரசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT