Published : 18 Jun 2025 06:46 AM
Last Updated : 18 Jun 2025 06:46 AM
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘காந்தாரா’. இந்தப் படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்துக்கு முந்தைய கதையாக ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஷிவமோகா மாவட்டத்தின் மாணி நீர்த்தேக்கத்தில் நடந்தது.
ரிஷப் ஷெட்டியுடன் 30 பேர் கொண்ட குழு படப்பிடிப்புக்காகச் சென்றபோது, படகு கவிழ்ந்தது என்றும் ஆழமற்ற பகுதியில் கவிழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியதாகவும் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், படக்குழுவினர் இதை மறுத்துள்ளனர்.
இதுபற்றி இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆதர்ஷ் ஜா கூறும்போது, ‘‘ஒரு காட்சியின் பின்னணியில் ஒரு படகு இருக்க வேண்டும் என்பதற்காகப் படமாக்கினோம். பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, படகு கவிழ்ந்தது. அதில் ரிஷப் ஷெட்டி உள்பட படக்குழுவினர் யாரும் இல்லை. உண்மையான படப்பிடிப்பு நடந்த இடம், அந்த இடத்தில் இருந்து தொலைவில் இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடர்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT