Last Updated : 13 Jun, 2025 09:51 PM

 

Published : 13 Jun 2025 09:51 PM
Last Updated : 13 Jun 2025 09:51 PM

HIT: The Third Case - தெறிக்கும் ரத்தமும், சில திருப்பங்களும் | ஓடிடி திரை அலசல்

சைலேஷ் கோலனுவின் எழுத்து, இயக்கத்தில் உருவான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ஹிட் 3’ (HIT: The Third Case). 2025-ல் வெளியான இப்படத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘ஹிட்’ இரண்டாவது வழக்கின் நிகழ்வுகளை தொடர்ந்து, கிருஷ்ணதேவுக்கு பதிலாக அர்ஜுன் சர்க்கார் (நானி) விசாகப்பட்டினத்தில் பணியமர்த்தப்படுகிறார். காட்டுப் பகுதியில் ஒரு நபரை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்கிறார் அர்ஜுன். பின்பு அந்த கொலையை விசாரிக்கும் அதிகாரியாகவும் அவரே செயல்படுகிறார்.

அர்ஜுனின் செயல்கள் மீது சந்தேகப்படும் ஏஎஸ்பி வர்ஷா அவரை கண்காணிக்கத் தொடங்குகிறார். அர்ஜுன் அதேபோல் செய்ய போகும் அடுத்த கொலையை தடுத்து நிறுத்த முயல்கிறார் வர்ஷா. தான் ஏன் அந்த கொலைகளை செய்கிறார் என வர்ஷாவிடம் அர்ஜுன் விளக்க, கதை ஒரு மாதத்துக்கு முன் நகர்கிறது.

அர்ஜுன் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி கொண்டிருந்தபோது, இதேபோன்ற ஒரு கொலையை விசாரித்து, அதன் குற்றவாளியையும் கண்டுபிடிக்கிறார். அவர் விசாரித்து கொண்டிருக்கும் அதே வேளையில் பிஹாரில் அதே பாணியிலான கொலையை வேறொருவர் நிகழ்த்துகிறார். அவர்கள் இருவரையும் விசாரிப்பதன் மூலம் உலகளவில் இதே பாணியிலான கொலைகள் தொடர்ந்து நடப்பதை கண்டறிகிறார்.

மேலும், அவர்கள் தாங்கள் கொலை செய்வதை வீடியோவாக எடுத்து டார்க் வெப்பில் பதிவேற்றுவதையும் அறிகிறார். இவை அனைத்தையும் அறிந்த அர்ஜுன் அதே குற்ற செயல்களை ஏன் புரிகிறார்? அவர் செய்யும் கொலைகளின் பின்னணி என்ன? அதே பாணியிலான கொலைகள் தொடர்ந்து நடைப்பெற்றதா, அந்த டார்க் வெப் குழுவை அர்ஜுன் சர்க்கார் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் திரைக்கதை.

தெலுங்கு சினிமாவின் யதார்த்த நாயாகனாக இருக்கும் நானி, அர்ஜுன் சர்க்கார் கதாபாத்திரத்துக்கும் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார். அவரது கச்சிதமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கதையின் போக்கோடு எளிதாக ஈர்த்து விடுகிறார். அழுத்தமான கதைக்களத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அதை படமாக்கிய விதம் பார்வையாளர்களை பாராட்ட வைக்கிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை உள்ள ஆக்‌ஷன் படங்களின் சாயல் இருந்தாலும், அவை காட்சியின் ஓட்டத்தை மெருகேற்றுவதால் நம்மை ரசிக்க வைக்கிறது. இதைத் தவிர்த்து, க்ளைமாக்ஸ் காட்சியில் ஹிட் 1, ஹிட் 2 நாயகர்களை ஒன்றிணைத்த விதம் பாராட்டத்தக்கது. ஹிட் நான்காம் பாகத்துக்கு கொடுக்கப்பட்ட லீடும் சிறப்பு. இந்த காட்சிகளுக்காக இயக்குநர் எழுத்தில் மெனக்கெடலை கொட்டியிருக்கிறார் என்பதை திரையில் காண்பதன் மூலம் அறிய முடிகிறது.

சானு வர்கீஸின் கேமரா ஆக்‌ஷன் காட்சிகளை அதிரடியாக படம் பிடித்திருக்கிறது. ஜம்முவின் அழகையும் காட்சிப்படுத்த தவறவில்லை. HIT, கொடூர கொலைகள், டார்க் வெப் என ஆங்காங்கே திரைக்கதை சென்றாலும், அதை சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறார் கார்த்திகா ஸ்ரீநிவாஸ். மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கிறது.

க்ரைம் த்ரில்லருக்கே உரிய சில திருப்பங்கள் திருப்தி அளித்தாலும் ஒரே கண்டிஷன்... ரத்தம் தெறிக்கும் படங்களை விரும்புவோருக்கு மட்டுமே உகந்த படமாக இருக்கிறது ‘ஹிட் 3’. இதை நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் காணலாம். >>ட்ரெய்லர் வீடியோ லிங்க்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x