Published : 13 Jun 2025 11:17 AM
Last Updated : 13 Jun 2025 11:17 AM
‘பிரேமலு’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட படம் ‘பிரேமலு 2’. இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கி, படத்தினை டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், எந்தவொரு அறிவிப்புமே இன்றி, படப்பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ‘பிரேமலு 2’ படம் கைவிடப்பட்டது உறுதியாகி இருக்கிறது.
‘பிரேமலு’ படத்தின் இணை தயாரிப்பாளரான திலீஷ் போத்தன், ‘பிரேமலு 2’ படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். மீண்டும் எப்போது தொடங்கும் என்ற தகவலையும் திலீஷ் போத்தன் தெரிவிக்கவில்லை. இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரமேலு’. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஸ்கரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஃபஹத் பாசில், ஷ்யாம் புஸ்கரன், திலேஷ் போத்தன் ஆகிய மூவரும் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம், உலக அளவில் ரூ.130 கோடி வரை வசூலித்தது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT