Published : 18 Apr 2025 12:04 AM
Last Updated : 18 Apr 2025 12:04 AM
தான் நீண்டநாட்களாக பொதுவெளியில் வராமல் இருப்பது குறித்து நடிகை நஸ்ரியா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சில நாட்களாக எங்கும் வரவில்லை என்று உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களில் பலருக்கு தெரிந்தபடி, இந்த அற்புதமான சமூகத்தில் நான் எப்போதும் ஒரு சுறுசுறுப்பான உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால், கடந்த சில மாதங்களாக, என் மனநலம் மற்றும் தனிப்பட்ட சவால்கள் காரணமாக நான் மிகவும் சிரமத்துக்குள்ளானேன். இது என்னுடைய இருப்பை கடினமாக்கியது.
எனது 30வது பிறந்தநாளையும், புத்தாண்டையும், என் 'சூக்ஷ்மாதர்ஷினி' படத்தின் வெற்றியையும், இன்னும் பல முக்கியமான தருணங்களையும் கொண்டாட முடியவில்லை. நான் ஏன் காணாமல் போனேன் என விளக்காததற்கும், அழைப்புகளை எடுக்காததற்க்கும், மெசேஜ்களுக்கு பதில் சொல்லாததற்க்கும் என் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்படுத்தியிருக்கும் கவலை அல்லது சிரமத்திற்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன். நான் முற்றிலுமாக இயங்குவதை நிறுத்திவிட்டேன்.
வேலை விஷயமாக என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் என் சக நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறேன்.
ஒரு நேர்மறை விஷயமாக, சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதைப் பெற்றதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து அங்கீகாரங்களுக்கும் மிக்க நன்றி மற்றும் சக போட்டியாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
இது ஒரு கடினமான பயணம். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் குணமடைவதில் கவனம் செலுத்துகிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். முழுமையாகத் திரும்பி வர எனக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படலாம். ஆனால் நான் மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.
இன்று இதை எழுதுவதற்கான காரணம், இப்படி நான் காணாமல் போனதற்கு எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நான் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்... விரைவில் மீண்டும் இணைவோம். என்னோடு இருந்ததற்கும் உங்கள் முடிவில்லாத ஆதரவுக்கும் நன்றி” இவ்வாறு நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
நஸ்ரியாவின் இந்த பதிவில் நடிகைகள் பார்வதி, சமந்தா, கீர்த்தி பாண்டியன், ப்ரியா அட்லீ, நடிகர்கள் விஜய் வர்மா, ஷௌபின் ஷஹீர், டொவினோ தாமஸ், பேசில் ஜோசப் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT