Published : 13 Apr 2025 10:55 AM
Last Updated : 13 Apr 2025 10:55 AM

ஆஸ்கர் விருதில் ஸ்டன்ட் டிசைன் பிரிவு: இயக்குநர் ராஜமவுலி நன்றி

திரைத்துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருது, ஆஸ்கர். உலகப் புகழ்பெற்ற இந்த விருதைப் பெறுவதில் திரைக்கலைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு உட்பட 23 பிரிவுகளில் இந்த விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்டன்ட் பிரிவு இதுவரை ஆஸ்கரில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் 2028-ம் ஆண்டு முதல் ஸ்டன்ட் பிரிவுக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. ஆஸ்கர் விருதின் நூறாவது ஆண்டை முன்னிட்டு இப்பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்கர் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி, பில் கிராமர் மற்றும் அகாடமியின் தலைவர் ஜேனட் யாங் தெரிவித்துள்ளனர்.

“சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே ‘ஸ்டன்ட் வடிவமைப்பு’ திரைப்படத் தயாரிப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் பணிகளைக் கவுரவிப்பதில் பெருமை கொள்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு போஸ்டரில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சியையும் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ராஜமவுலி, “இந்த அங்கீகாரத்தை சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ ஹாரா மற்றும் அகாடமி நிர்வாகிகளுக்கு நன்றி. இந்த அறிவிப்பில் ‘ஆர்ஆர்ஆர்' படத்தின் அதிரடி காட்சி பிரகாசிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x