Published : 23 Jan 2025 03:57 PM
Last Updated : 23 Jan 2025 03:57 PM
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தொடர்ந்து 3-வது நாளாக திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜுவின் வீடு, அலுவலகங்களிலும், புஷ்பா - 2 திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடு, அலுவலகங்களிலும், இவர்களுக்கு நிதி உதவி செய்த நிறுவனங்களிலும் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
புஷ்பா-2 திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்ததாக அத்திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்தது. மேலும், நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும் வசூலில் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று ராம்சரண் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படமும் ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தையே கொடுத்ததாக கூறப்பட்டது.
இதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் வெளியான வெங்கடேஷ் நடித்த ‘சங்கராந்தி கி ஒஸ்துன்னாம்’ ஆகிய படங்களை தயாரித்த தில்ராஜு மற்றும் இவருக்கு திரைப்படம் எடுக்க ஃபைனான்ஸ் உதவி செய்ததாக தெரிவிக்கப்பட்ட மேங்கோ மீடியா ஆகியோர் அதிகமாக படங்களை தயாரிப்பது எப்படி? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இவர்கள் காட்டும் வருமான கணக்குகள் சரிதானா என வருவாய் துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் கடந்த 3 நாட்களாக இவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 55 குழுக்களாக , தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளின் ஆவணங்கள் தில் ராஜுவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.26 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் தில்ராஜு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மேங்கோ மீடியாவின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். தில்ராஜுவின் மனைவி, மகள் ஆகியோரை அழைத்து கொண்டு அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு சென்று லாக்கர்களை திறக்க வைத்து அவைகளையும் சோதனையிட்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று காலை கூட வங்கி லாக்கர்கள் சோதனை செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்பட்டுள்ள தொகைக்கும், இந்த மூவரின் வங்கி கணக்குகளில் உள்ள தொகைக்கும் பெரும் வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, நோட்டீஸ் வழங்குவர் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT