Published : 21 Jan 2025 05:22 PM
Last Updated : 21 Jan 2025 05:22 PM
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். வரி ஏய்ப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள தில் ராஜு, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வரிமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தத் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ‘கேம் சேஞ்சர்’, ‘சங்கராந்திகி வாஸ்துணம்’ மற்றும் ‘புஷ்பா 2: தி ரூல்’ ஆகியத் திரைப்படங்களைத் தயாரித்திருந்தனர். இந்தச் சோதனைகள் குறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “இந்தத் தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள 8 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்கள் இதில் அடங்கும்.
வேலம்குச்சா வெங்கட ரமணா ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு, தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராவார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மாநில அரசு தில் ராஜுவை சமீபத்தில் தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமித்தது.
சமீபத்தில் ராஜு தயாரித்து வெங்கடேஷ் நடித்து வெளியான சங்கரந்திகி வாஸ்துணம், ரவி மற்றும் நவீன் தயாரித்து அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: தி ரூல் ஆகிய படங்களின் வெற்றி தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டது. தில் ராஜு தயாரிப்பில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படம் இழப்பை சந்தித்தது. இவற்றில் ‘கேம் சேஞ்சர்’ மற்றும் புஷ்பா 2 திரைப்படங்கள் அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தில் ராஜுவை பொறுத்தவரையில் தமிழில் விஜய்யை வைத்து ‘வாரிசு’ படத்தை தயாரித்ததன் மூலம் பரிச்சயமானவர்.
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுத் தொடர்பாக நடத்தப்பட்ட இந்தச் சோதனைகள், ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் போன்ற பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டதாக தகவலறிந்தவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT