Published : 14 Jan 2025 04:06 PM
Last Updated : 14 Jan 2025 04:06 PM
ஹைதராபாத் சைபர் க்ரைமில் ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் புகார் அளித்திருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே, ஹைதராபாத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் புகார் அளித்திருக்கிறார்கள். அதில், “கேம் சேஞ்சர் படம் வெளியான அன்றே படத்தினை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள். இதற்கு சுமார் 45 பேர் கொண்ட ஒரு குழு பொறுப்பாக இருக்கலாம். பட வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பு குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தயாரிப்பாளர்களை சிலர் வாட்ஸ்அப் மூலமாக பணம் கேட்டு மிரட்டினார்கள்.
அவர்களது கோரிக்கைகளை பூர்த்தி செய்யாத பட்சத்தில், படத்தினை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என எச்சரித்தனர். பட வெளியீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் முக்கிய திருப்பங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்கள். படம் வெளியான அன்றே ஹெச்டி தரத்தில் படத்தினை இணையத்தில் மட்டுமன்றி இதர தொழில்நுட்பங்கள் வாயிலாக பரவலாக பரப்பினார்கள்” என்று ‘கேம் சேஞ்சர்’ படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், மிரட்டல்களுக்கு காரணமான 45 பேர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறார்கள். இந்த குழு தனியாக செயல்பட்டதா அல்லது பின்னால் யாருடைய ஆதரவு இருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கினை சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, சமூக ஊடகத்தில் படத்தினை திட்டமிட்டு எதிர்மறை பிரச்சாரம் செய்த எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் படத்தின் பிரதான காட்சிகளை பகிர்ந்துள்ளனர். அவர்கள் மீது புகார்கள் அளித்திருக்கிறது ‘கேம் சேஞ்சர்’ படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT