Published : 20 Dec 2024 04:12 PM
Last Updated : 20 Dec 2024 04:12 PM
கோழிக்கோடு: மலையாள எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
91 வயதான எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் ஆந்தாலஜியாக வெளியானது. மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
மொத்தம் 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள அவர் 7 படங்களை இயக்கியுள்ளார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான வாசுதேவன் நாயர் கடந்த 5 நாட்களாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இதய பாதிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் வாசுதேவன் நாயருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன், “வாசுதேவன் நாயர் உடல் நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வதந்திகளை நம்ப வேண்டாம். அவருக்காக பிரார்த்திப்போம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT