Published : 24 May 2024 08:35 PM
Last Updated : 24 May 2024 08:35 PM
பிரான்ஸ்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகை கனி குஸ்ருதி தனது கையில் ‘தர்பூசணி’ வடிவ கைப்பையை வைத்திருந்தார். அவரின் இந்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும். அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரான்ஸில் ‘கான் சர்வதேச திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது. இந்தப் பட விழாவில் இந்தியா சார்பில் 7 திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தேர்வான ‘All We Imagine as Light’ படம் இன்று திரையிடபட்டு 8 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டலை பெற்றது. பார்வையாளர்கள் பலரும் படத்தை பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், இந்த திரையிடல் நிகழ்வில் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது இப்படத்தில் நடித்திருந்த கனி குஸ்ருதி தன்னுடைய கையில் ‘தர்பூசணி’ வடிவத்தில் கைப்பை ஒன்றை வைத்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும், அதனை உயர்த்திப் பிடித்து காட்டி பாலஸ்தீனம் மீதான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும் சூழலில், மலையாள நடிகர் ஒருவரின் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பாலஸ்தீனத்தின் குறியீடு தர்பூசணி: தர்பூசணியைப் பொறுத்தவரை அது பாலஸ்தீன மக்களின் போராட்டத்தின் அடையாளமாகவும், அவர்களின் ஒற்றுமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வெட்டப்பட்ட தர்பூசணியின் நிறம் அப்படியே, பாலஸ்தீனர்களின் கொடியின் நிறத்தை பிரதிபலிக்கிறது.
சிகப்பு, பச்சை, கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் பாலஸ்தீன கொடியுடன் ஒப்பிடப்படுகின்றன. தர்பூசணிகள் பாலஸ்தீனத்தில், மேற்குக் கரையிலிருந்து காசா வரை பரவலாகப் பயிரிடப்படுகின்றன.
மேலும், பாலஸ்தீனிய உணவு வகைகளில் முக்கியமாக உணவாகவும் அவை இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களிலும் தர்பூசணி வடிவிலான எமோஜிக்கள் பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்துவதால், அவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT