Published : 16 Apr 2024 01:45 PM
Last Updated : 16 Apr 2024 01:45 PM

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் கே.ஜி.ஜெயன் மறைவு

கொச்சி: பிரபல கர்நாடக இசைக் கலைஞரும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் காலமானார். அவருக்கு வயது 89.

1934ஆம் ஆண்டு கோட்டயம் பகுதியில் பிறந்த கே.ஜி.ஜெயன், கேரளாவில் பிரபல ஜெயா - விஜயா இரட்டையர்களில் ஒருவர். மிக இளம் வயதிலேயே இசைத் துறையில் நுழைந்த ஜெயன், விஜயன் சகோதரர்கள் கர்நாடக இசையில் சிறந்து விளங்கினர்.

இந்த கூட்டணியின் பக்திப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. சபரிமலை ஐயப்பன் கோவில் தினமும் திறக்கப்படும்போது கே.ஜி.ஜெயன் பாடிய ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடல் ஒலிக்கப்படுவது வழக்கம்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை கே.ஜி.ஜெயன் உருவாக்கியுள்ளார். இதுதவிர சில மலையாளப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் இவரின் மகன் ஆவார்.

89 வயதான கே.ஜி.ஜெயன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.16) காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x