Published : 22 Jan 2018 04:56 PM
Last Updated : 22 Jan 2018 04:56 PM
பிரெஞ்ச் திரைப்பட இயக்குநர் ஜெரோம் சால் 'அஞ்ஞாதவாசி' படக்குழுவின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது பிரெஞ்ச் படமான 'லார்கோ வின்ச்'சின் கதையை திருடி 'அஞ்ஞாதவாசி' எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாண் நடிப்பில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெளியான படம் 'அஞ்ஞாதவாசி'. ஏற்கெனவே, இந்த இருவரும் 'ஜல்சா', 'அத்தாரிண்டிகி தாரேதி' ஆகிய படங்களில் பணியாற்றி பெரும் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால் 'அஞ்ஞாதவாசி' படம் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.
மாறாக படத்தின் விமர்சனங்கள் சற்று கடுமையாகவே இருந்தன. இந்நிலையில், 'லார்கோ வின்ச்' என்ற பிரெஞ்ச் திரைப்படத்தின் கதையே அக்ஞாதவாசியின் மையக்கரு என்ற சர்ச்சை தற்போது சூடு பிடித்துள்ளது.
'அஞ்ஞாதவாசி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போதே பலரும் இது 'லார்கோ வின்ச்' போல இருக்கிறது என்ற கருத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட 'லார்கோ வின்ச்' இயக்குநர் ஜெரோம் சால் தானும் படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், 'லார்கோ வின்ச்' படத்தின் ரீமேக் உரிமையை வைத்திருந்த டி சீரிஸ் நிறுவனமும் 'அஞ்ஞாதவாசி' தயாரிப்பாளர்களிடம் விளக்கம் கோரியிருந்தது.
படம் வெளியாக, எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோடு, கதையும், சில காட்சிகளும் 'லார்கோ வின்ச்' படத்தைப் போலவே இருக்கிறது என்றும் பலரால் குறிப்பிடப்பட்டது. டி சீரிஸ் நிறுவனத்துடன் 'அஞ்ஞாதவாசி' தயாரிப்பாளர்கள் பேசி சமரசம் செய்து உரிமைத் தொகையை கொடுத்துவிட்டனர் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் ஜெரோம் சால், இது செல்லாது, ஏனென்றால் தனது ரீமேக் உரிமை இந்தியாவுக்கானது மட்டுமே என்றும், 'அஞ்ஞாதவாசி' உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது என்றும் ட்விட்டரில் பதிலளித்திருந்தார்.
இதனிடையே 'அஞ்ஞாதவாசி' படத்தையும் பார்த்திருந்த ஜெரோம், நல்ல சூழலில் ரசிகர்களிடையே படம் பார்த்தேன். ஆனால், என்னால் ரசிக்க முடியவில்லை. ஏனென்றால் எனது 'லார்கோ வின்ச்' கதையோடு பல ஒற்றுமைகள் இதில் இருக்கிறது என்று பதிவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ட்விட்டரில் பதிவிட்ட ஜெரோம், "இந்தியா சினிமாவில் மற்றவர்கள் கதையைத் திருடாமல் இருக்குமளவுக்கு போதுமான படைப்பாற்றலும் திறமையும் இருக்கிறது. ஒரு வாரமாக 'அஞ்ஞாதவசி' குழுவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் இனி சட்டபூர்வ நடவடிக்கை எடுப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரச்சினை பெரிதாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை 'அஞ்ஞாதவாசி' தயாரிப்பு தரப்பு மற்றும் டி சீரிஸ் தரப்பு இணைந்து எடுத்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் எதிர்காலம் இதற்குப் பிறகு என்னாகும் என்ற கேள்விக்குறியும் எழாமல் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT