Published : 11 Nov 2023 08:17 PM
Last Updated : 11 Nov 2023 08:17 PM

தென் அமெரிக்காவின் 400 திரையரங்குகளில் வெளியாகும் டோவினோ தாமஸின் ‘2018’

அமெரிக்காவில் ஜூட் ஆந்தணி ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் வேணு

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘2018’ மலையாள படம், தென் அமெரிக்காவின் 400 திரையரங்குகளில் வெளியாகிறது.

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு (The Film Federation of India) அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் தென் அமெரிக்காவின் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தென் அமெரிக்காவின் இந்திய திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை என படத்தின் தயாரிப்பாளர் வேணு தெரிவித்துள்ளார். துபாயை தளமாகக் கொண்ட ஏரீஸ் குழுமத்தின் சினிமா பிரிவான Indie wood Distribution Network தென்அமெரிக்காவில் படத்தை வெளியிடுகிறது.

ஆஸ்கருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் அமெரிக்காவில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து ஆதரவும், அன்பும் எங்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி. தென் அமெரிக்காவில் ‘2018’ ரிலீஸ் செய்யப்படுவது இந்திய சினிமாவுக்கே ஒரு மைல் கல்லாக இருக்கும். கலாசாரத்தை கடந்து படம் பேசும் மனிதநேயம் பார்வையாளர்களை ஊக்குவிக்கும். தென் அமெரிக்க பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக இது இருக்கும்” என்றார்.

2018: ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் ரூ.200 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x