Published : 03 Jun 2023 05:44 PM
Last Updated : 03 Jun 2023 05:44 PM

Odisha Train Accident | “நெஞ்சம் பதைபதைக்கிறது” - வேதனை பகிர்ந்த திரையுலகினர்

ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்: “ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்" என தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: “ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்துச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்” என்றார்.

ராம்சரண்: “பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்: “ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.

சூரி: “நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது‌!! இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஹரீஷ் கல்யாண்: “பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து வருத்தமடைந்தேன். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி: “ஒடிசாவில் நிகழ்ந்த ரயில்விபத்து குறித்து அறிந்து மனவேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபடும் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி: ஒடிசாவில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து மற்றும் அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். உயிர்களைக் காப்பாற்ற இரத்த தானத்துக்கான அவசரத் தேவை இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உயிர்காக்கும் இரத்த தானத்தை செய்வதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எனது ரசிகர்கள் மற்றும் அருகிலுள்ள நல்ல மனம் கொண்டோர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஜூனியர் என்டிஆர்: துயரமான இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த அழிவுகரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கடினமான நேரத்தில் பலமும் ஆதரவும் அவர்களைச் சூழ்ந்திருக்கட்டும்.

சீனுராமசாமி: தொலைந்து போயிருக்கலாம். ஆறுதலாவது உண்டு. தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஓளியென நம்பிக்கையிருக்கும். திரும்ப வரலாம்மென்ற நினைப்பு, நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும். வாழப் போனவர்கள் திரும்ப வருகையில் நிகழும் பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள், விபத்துக்கு பின்னிருக்கும் ஒரு கவனமின்மை அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை. இறப்பின் அஞ்சலி செலுத்தும் நேரமிது. பிழைத்தவர்கள் மறுபடி பிழைக்கச் செய்யும் தருணமிது தப்பியவர்கள் இல்லம் வரும் மாலையிது.சுற்றி வந்து கைகொடுத்த கிராமத்து மனிதத்தை வாழ்த்தும் நிமிடமிது” என பலரும் தங்கள் வருத்தங்களையும் இரங்கல்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x