Published : 26 Sep 2017 04:10 PM
Last Updated : 26 Sep 2017 04:10 PM
‘அவதார்’ படத்தின் அடுத்த நான்கு பாகங்களுக்கான படப்பிடிப்பை ஜேம்ஸ் கேமரூன் இன்று தொடங்கினார்.
2009-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார்’ உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் ஜேம்ஸ் கேமரூன், அடுத்த பாகத்தை உடனடியாகத் தொடங்கவில்லை.
பல வருட திட்டமிடல்களுக்குப் பிறகு, இன்று ஜேம்ஸ் கேமரூன், அமெரிக்காவிலுள்ள மன்ஹாட்டன் கடற்கரையில் ‘அவதார்’ படத்தின் அடுத்த நான்கு பாகங்களுக்கான படப்பிடிப்பைத் தொடங்கினார். 3டி-யிலும் தயாராகும் இப்படங்களுக்கு இப்போதே ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
முன்னதாக, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ படத்தின் மூன்று பாகங்களுக்கான படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்றது. அதைப் போலவே அவதாரின் நான்கு பாகங்களும் தொடர்ச்சியாக தயாரிக்கப்படவுள்ளது. மொத்தமாக இதன் பட்ஜெட் 1 பில்லியன் டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் அதிக வசூல் செய்த ‘டைட்டானிக்’, ‘அவதார்’ ஆகிய படங்கள் மட்டுமன்றி, அர்னால்ட் நடித்த ‘டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே’, ‘ஏலியன்ஸ்’ ஆகிய படங்களையும் இயக்கியவர் ஜேம்ஸ் கேமரூன். எனவே இத்தகைய பெரிய பட்ஜெட் குறித்து கவலை இல்லை; நிச்சயம் வசூலாகிவிடும் என்று கூறப்படுகிறது
ஃபாக்ஸ் நிறுவனம் ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை 18, டிசம்பர் 2020-ல் வெளியிடும். மூன்றாம் பாகம் 2021-ல் வெளியாகும். நான்கு மற்றும் ஐந்தாம் பாகங்கள் முறையே 2024 மற்றும் 2025-ல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT