Published : 21 Oct 2021 11:46 AM
Last Updated : 21 Oct 2021 11:46 AM
வீடியோ கேசட் கடையில் பணியாற்றி, சினிமாவின் மீதிருக்கும் ஆர்வத்தால் ‘ரிசர்வாயர் டாக்ஸ்’ திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்து உலக ரசிகர்களின் கவனத்தையே ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ.
ஆனால், கடந்த சில வருடங்களாகவே 10 நல்ல படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும், வயதான காலம் வரையெல்லாம் தனக்குப் படம் இயக்குவதில் விருப்பமில்லை என்றும் கூறிவருகிறார். 2019ஆம் வெளியான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்துடன் இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். எனவே அவரது 10வது படமே அவரது கடைசிப் படமாக இருக்கலாம் என்று ஹாலிவுட் ஊடகங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ரோம் திரைப்பட விழாவில் பேசிய அவர் தனது அடுத்த படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில டாரண்டினோ. கூறியிருப்பதாவது:
என்னுடைய அடுத்த படம் என்னவாக இருக்கப் போகிறது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நான் ‘கில் பில்’ மூன்றாம் பாகத்தை கூட இயக்கலாம். மேலும் ஒரு வெஸ்டர்ன் தொடர்பான ஒன்றை உருவாக்க வேண்டும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அது என்னுடைய அடுத்த படமாக இருக்கும் என்று அர்த்தமல்ல. இது நான் நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம். அது குறித்து நான் விவரிக்கப் போவதில்லை. ஆனால் அது கண்டிப்பா வெஸ்டர்ன் வகையைச் சேர்ந்ததாக இருக்கும்.
அனைவரும் வெவ்வேறு மொழிகளைப் பேசக் கூடிய வகையில் நான் அதை உருவாக்க விரும்புகிறேன். அதாவது வில்லன் ஒரு இத்தாலியை சேர்ந்தவர். ஹீரோ அமெரிக்கர். கெட்ட ஷெரிஃப் ஒரு ஜெர்மானியர். மெக்ஸிகன் சலூன் பெண் இஸ்ரேலைச் சேர்ந்தவர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழி பேசக் கூடியவராக இருப்பார்கள்.
இவ்வாறு டாரண்டினோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT