Last Updated : 28 Dec, 2020 02:19 PM

 

Published : 28 Dec 2020 02:19 PM
Last Updated : 28 Dec 2020 02:19 PM

கோவிட்-19 நெருக்கடியைத் திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும்: டாம் ஹாங்க்ஸ் நம்பிக்கை

ஓடிடி தளங்களை ரசிகர்கள் நாடுவது காலத்துக்கேற்ற மாற்றமாக இருந்தாலும் இந்த கோவிட் நெருக்கடியைத் தாண்டி திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும் என ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்குச் செய்திகள் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் டாம் ஹாங்க்ஸ்ஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"இந்த மிகப்பெரிய மாற்றம் எதிர்பார்த்த ஒன்றுதான். வீட்டிலிருந்தே புதிய படங்களைப் பார்க்கும் வாய்ப்பை ஸ்ட்ரீமிங் தளங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. திரையரங்குகள் தொடர்ந்து இயங்குமா என்று கேட்டால், கண்டிப்பாக அவை இயங்கும். மீண்டும் சகஜ நிலை திரும்பி எல்லாம் முழு வீச்சில் இயங்க ஆரம்பித்த பிறகு என்ன மாதிரியான திரைப்படங்களைத் திரையிடலாம் என்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கும்.

பிரம்மாண்ட திரைப்படங்கள்தான் திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தும். நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் திரைப்படம்தான் கடைசியாகப் பெரிய திரையில், பெரியவர்களுக்கான சுவாரசியமான விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இதற்குப் பிறகு மீண்டும் திரையரங்குக்கு ரசிகர்களை வரவழைக்க மார்வல் உலகம் போன்ற திரை வரிசைகளை நாம் திரையிட வேண்டும்.

ஏனென்றால் அதுபோன்ற படங்களைப் பெரிய திரையில்தான் ரசிக்க முடியும். வீட்டில் சிறிய திரையில் பார்க்கும்போது அதன் தாக்கம் இருக்காது. பல திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங்கில் மட்டுமே வெளியாகும் என நினைக்கிறேன். அப்படிப் பார்க்க அவை நன்றாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். ஏனென்றால் அவை தொலைக்காட்சியில், வீட்டில் பார்ப்பதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டிருக்கும். இந்த மாற்றம் நீண்ட காலமாகவே வர வேண்டிய ஒன்று தான், இப்போது வந்திருக்கிறது" என்று டாம் ஹாங்க்ஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x