Published : 20 Mar 2020 10:30 AM
Last Updated : 20 Mar 2020 10:30 AM

‘ஆசிய மக்களுக்கு எதிரான வன்முறையைக் கைவிடுங்கள்’ - கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வேதனை

தென்கொரிய - அமெரிக்க நடிகர் டேனியல் டே கிம்முக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. உலகம் முழுவதும் வைரஸால் இதுவரை 2.19 லட்சம் பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,000 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாக பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

திரையுலகப் பிரபலங்களையும் கரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவி ரீடா ஹாங்கஸ், நடிகை ஓல்கா குரிலென்கோ, ‘தோர்’ நடிகர் இட்ரிஸ் எல்பா, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர்களான இந்திரா வர்மா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு ஆகியோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்த வரிசையில் பிரபல தென் கொரிய - அமெரிக்க நடிகர் டேனியல் டே கிம்முக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தன் இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து டேனியல் டே கிம் கூறியிருப்பதாவது:

''நேற்று கரோனா வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடிய கோவிட்-19 காய்ச்சலால் நான் பாதிக்கப்பட்டேன். நான் சரியாகி விடுவேன் என்று தெரிகிறது. ஆனால் என்னுடைய பயணத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது உங்களுக்கு உதவக்கூடும். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், பொறுமையாகவும், எல்லாவற்றுக்கும் மேல் நலமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் அலட்சியமாகக் கையாண்டால் உங்கள் அன்புக்குரியவர்கள் உட்பட பல லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மற்றவர்களின் நலனுக்காக பிறரிடமிருந்து விலகியிருத்தல், கைகளைக் கழுவுதல், சுய தனிமைப்படுத்துதல், முகங்களைத் தொடாமலிருத்தல் ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

ஆசிய மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுங்கள். நான் ஆசியாவைச் சேர்ந்தவன். நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால், நான் அதை சீனாவில் இருந்து பெறவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து பெற்றேன்.
என்னால் இதை நியூயார்க் வைரஸ் என்று அழைக்க முடியும். ஆனால் அது சிறுபிள்ளைத்தனமானது. இப்படிப் பெயர் வைத்து அழைப்பதால் எந்தப் பலனும் இல்லை. நம்மையும் பிறரையும் எப்படி பாதுகாத்துக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் முக்கியம்''.

இவ்வாறு டேனியல் டே கிம் கூறியுள்ளார்.

டேனியல் டே கிம் ‘லாஸ்ட்’, ‘ஹவாய் ஃபைவ்-0’ உள்ளிட்ட தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x