Published : 30 Jan 2020 10:25 AM
Last Updated : 30 Jan 2020 10:25 AM

ஹீரோ என்ற வார்த்தை போதாது- ரஸ்ஸல் க்ரோவ் புகழாரம் சூட்டிய நபர்- யார் இந்த நிக்கோலஸ் வின்டன்?

பிரபல நடிகர் ரஸ்ஸல் க்ரோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு முதியவரைச் சுற்றி சிலர் நின்று கைதட்டி ஆராவாரம் செய்கின்றனர்.

அந்த வீடியோவில் இருப்பவர் யார்? அவர் செய்த சாதனைகள் என்ன?

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் உச்சத்தில் இருந்தது. ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களை தேடித் தேடி கொன்று குவித்துக் கொண்டிருந்தனர்.

ஜெர்மெனியை பூர்வீகமாக கொண்ட நிக்கோலஸ் வின்டன், சிறுவயதிலேயே பெற்றோருடன் பிரிட்டனில் குடியேறினார். 1938ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு சில நாட்கள் முன்பு தனது விடுமுறையைக் கழிப்பதற்காக ஸ்விட்சர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தார் நிக்கோலஸ். ப்ரேக் (prague) நகரத்தில் இருந்த வின்டனின் நண்பர் மார்ட்டின் பிளேக், நாஜிப் படைகளிடமிருந்து யூதர்களை மீட்க குழு ஒன்றை அமைத்திருந்தார்.

இந்த குழுவில் இணைந்து ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்த செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் இருக்கும் யூதர்களின் முன்னேற்றத்துக்கு உதவுமாறு வின்டனிடம் கேட்டுக் கொண்டார் பிளேக். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வின்டன் அங்கு சென்று யூதர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நாஜிப்படைகளால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த ஏராளமான குழந்தைகளை காப்பாற்றி அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை வின்டன் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

நாஜிப் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவி ரயில், விமானம், கப்பல் உள்ளிட்டவற்றின் மூலம் பலமுறை பயணம் செய்து நிக்கோலஸ் வின்டன் காப்பாற்றிய குழந்தைகளின் எண்ணிக்கை 669.

வின்டனில் துணிச்சலான முயற்சியால் காப்பாற்றப்பட்ட அந்த குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைத்தது. ஆனால் இந்த சம்பவத்தை பற்றி வின்டன் யாரிடமும் தெரிவிக்கவில்லை. தன் மனைவியிடமே கூட இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.

ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

1988ஆம் ஆண்டு வின்டனின் மனைவிக்கு அவர்களது வீட்டில் ஒரு பழைய நோட்டுப் புத்தகம் கிடைக்கிறது, அதில் வின்டன் மீட்ட குழந்தைகளின் படங்கள், விவரங்கள், அவர்களை மீட்பதற்கான குறிப்புகள் எழுதப்பட்டிருந்தத்தை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள குழந்தைகளை பத்திரிகையாளர் ஒருவரின் உதவியோடு கண்டுபிடித்தார்.

பின்னர் பிபிசி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளராக அழைக்கப்பட்டார் நிக்கோலஸ் வின்டன், திடீரென் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இரண்டாம் உலகப் போரில் 669 குழந்தைகளை மீட்ட ஒருவரைப் பற்றி பேசினார். அப்போது நிக்கோலஸை தவிர மற்ற பார்வையாளர் அனைவரும் நிக்கோலஸை சூழ்ந்து கொண்டு கைதட்டினார்கள். அந்த நிகழ்ச்சியே தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்று பிறகுதான் நிக்கோலஸுக்கு புரிந்தது. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்திருந்த அனைவரும் அவரால் மீட்கப்பட்ட குழந்தைகள்.

2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு நிக்கோலஸ் வின்டனுக்கு ’சர்’ பட்டம் வழங்கி கவுரவித்தது.

சில மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ சமூக வலைங்களில் வைரலாக பரவியது. லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பகிர்ந்த தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று (30.01.19) கிளேடியேட்டர், பியூட்டிஃபுல் மைன்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ரஸ்ஸல் க்ரோவ் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் “இதை எவ்வளவு பார்த்தாலும் தீராது. தகுதியற்றவர்களை புகழ்வதில் நாம் காலத்தை செலவழிக்கிறோம். இதோ சர் நிக்கோலஸ் வின்டன் இருக்கிறார். இது போன்ற ஒரு மனிதரை நீங்கள் எவ்வளவு புகழவேண்டும். ’ஹீரோ’ என்ற வார்த்தை மிகவும் குறைவாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சர் நிக்கோலஸ் வின்டன் 2015ஆம் ஆண்டு தனது 106ஆம் வயதில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x