Published : 17 Jan 2020 03:13 PM
Last Updated : 17 Jan 2020 03:13 PM
இங்கிலாந்தின் புகழ்பெற்ற மருத்துவரும் விலங்குகளிடம் பேசக்கூடியவருமான ஜான் டூலிட்டில் தனது காதல் மனைவி லில்லியுடன் சேர்ந்து உலகம் முழுக்க பல சாகசப் பயணங்களை மேற்கொள்கிறார். ஒருமுறை தனியாக கடல் பயணம் மேற்கொள்ளும் லில்லி சென்ற கப்பல் கடலில் மூழ்கிவிடுகிறது. இந்த விபத்தில் லில்லி இறந்து விடுகிறார். இதனால் விரக்தியின் உச்சிக்குச் செல்லும் டூலிட்டில் விலங்குகளுக்கு மருத்துவம் பார்ப்பதை விட்டுட்டு தனது பங்களாவுக்குள்ளேயே அடைபட்டு சில விலங்குகளோடு ஒரு துறவி போல வாழ்கிறார்.
7 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து ராணி விக்டோரியா மர்ம வியாதியால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிறார். அரசியின் தோழியான லேடி ரோஸ் என்ற பெண்ணின் வற்புறுத்தலால் அரசிக்கு சிகிச்சையளிக்க ஒப்புக் கொள்ளும் டூலிட்டில் அரசிக்கு வந்திருக்கும் நோய்க்கான மருந்தைத் தேடி ஒரு அதிசயத் தீவுக்கு ஒரு சிறிய கப்பலில் புறப்படுகிறார். அவரோடு சில விலங்குகளும், ஒரு சிறுவனும் செல்கின்றனர். டூலிட்டிலால் தீவுக்குச் செல்ல முடிந்ததா? ராணியின் மர்ம நோயைக் குணப்படுத்த முடிந்ததா? என்ற கேள்விகளுக்கான விடையே ’டூலிட்டில்’
1998 ஆம் ஆண்டு எட்டி மர்ஃபி நடித்து 'டாக்டர் டூலிட்டில்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் வெளியாகியிருந்தாலும் அது முழுக்க சமகாலத்தில் நிகழும் கதைக்களத்தை கொண்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ’டூலிட்டில்’ படம் மூலக்கதையான 1920களில் ’தி ஸ்டோரி ஆஃப் டாக்டர் டூலிட்டில்' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துகொண்டிருந்த சிறுவர் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் முதல் படம் இது. அப்படத்துக்குப் பிறகு ஏகத்துக்கும் கூடியிருந்த ராபர்ட் டவுனியின் மவுசு இப்படத்தின் விளம்பரத்துக்கு பெரிதும் உதவியது என்றே சொல்லலாம். இத்தகைய பல பில்டப்புகளோடு வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.
படம் தொடங்கியதும் கார்ட்டூன் படமாக விரியும் டூலிட்டிலின் கதை நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே நிமிர்ந்து உட்கார்ந்த நம்மை சலிப்படைய வைக்கின்றன அடுத்தடுத்த காட்சிகள். நேரடியாக கதைக்குள் செல்லாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையுமே எளிதாக ஊகிக்க முடிகிறது. காலம் காலமாகப் பார்த்துச் சலித்த சாகசப் பயணக் கதைதான். அதைச் சொல்லும் விதத்திலும் இப்படம் தோற்றுப் போகிறது. வசனங்களும் காட்சியமைப்புகளும் 1960களில் வெளியான அட்வென்சர் படங்களை நினைவுபடுத்துகின்றன. நகைச்சுவை காட்சிகளும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
10 ஆண்டுகளாக டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டதாலோ என்னவோ அதிலிருந்து வெளியே வர ராபர்ட் டவுனி மிகவும் சிரமப்படுவது போல தோன்றுகிறது. குரலிலும் மிகப்பெரிய வித்தியாசம் தெரிகிறது.
நல்ல கிராபிக்ஸ், ராபர்ட் டவுனி ஜூனியர், 3டி, ஒளிப்பதிவு என அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது. இதில் ஒரு காட்சியில் ஆண்டோனியா பாண்டரஸின் கேமியோ வேறு.
ஃபாண்டஸி அட்வென்சர் படவிரும்பிகள் குழந்தைகளோடு சென்று ஒருமுறை பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT