Last Updated : 22 Dec, 2019 04:22 PM

 

Published : 22 Dec 2019 04:22 PM
Last Updated : 22 Dec 2019 04:22 PM

''அதைவிட முக்கியமான வேலைகள் இருக்கின்றன'' - ட்ரம்ப் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த ஹாலிவுட் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் லித்கோ, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

லாஸ் ஏஞ்சல்ஸ்

அரசியல் தலைவர் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜான் லித்கோ, தற்போது டொனால்டு ட்ரம்ப் கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக ஏசிஇ ஷோபிஸ்.காம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாலிவுட் நடிகர் ஜான் லித்கோ பல்வேறு அரசியல் தலைவர்கள் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர். அமெரிக்க நாடக வரலாற்றிலும் திரைப்பட வரலாற்றிலும் தனக்கென்று முத்திரை பதித்த லித்கோ, நடிகர், இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல்வேறு முகங்களையும் கொண்டவர். பல்வேறு விருதுகளைப் பெற்ற லித்கோ ஆஸ்கர், கிராமி விருதுகளுக்காக இரண்டு முறை பரிந்துரை செய்யப்பட்டவர்.

70களில் தொடங்கிய இவரது திரைப் பயணம் ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் தொலைக்காட்சி என விரிவடைந்துள்ளது. அரசியல் தலைவர்களின் கதாபாத்திரங்களில் இவர் ஏற்று நடித்ததாலேயே அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களில் டிஆர்பியில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக டொனால்டு ட்ரம்ப் கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்த அழைப்பை லித்கோ நிராகரித்துள்ளார். இது அமெரிக்க ஊடக வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜான் லித்கோ கூறுகையில், '' 'தி கிரவுன்' நெட் ஃப்ளிக்ஸ் தொடரில் பிரிட்டனின் இரண்டாம் உலகப்போர் காலகட்ட பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலாக நடிக்கவும் 'ஹிலாரி அன்ட் கிளிண்டன்' தொடரில் கிளிண்டனாக நடிக்கவும் கிடைத்த வாய்ப்புகளை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தேன். நான் எனக்கான கதாபாத்திரங்களைத் தேடி அலைவதில்லை. ஆனால் அவை கிட்டத்தட்ட மிக அருகில்தான் உள்ளன.

ஆனால், டொனால்டு ட்ரம்ப் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டுமென தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் கேட்டிருந்தனர். அது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருந்தது. அதில் நடிப்பதற்கில்லை என்று நான் மறுத்துவிட்டேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் அப்படி சொல்ல விரும்பியது உண்மைதான். அதைவிட முக்கியமான பணிகள் எனக்கு நிறைய உள்ளன என்பதையும் சொல்ல விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

ஜான் லித்கோவின் புதிய திரைப்படம் 'பாம்ப்செல்' ஜனவரியில் திரைக்கு வருகிறது. மறைந்த ஃபாக்ஸ் நியூஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரோஜர் அய்ல்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சர்ச்சைக்குரிய நபராக லித்கோ நடித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக டிவி தொகுப்பாளர்களான கிரெட்சன் கார்ல்சன் மற்றும் மேகின் கெல்லி ஆகியோரால் குற்றம் சாட்டப்பட்ட ரோஜர் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x