Published : 05 Nov 2019 01:03 PM
Last Updated : 05 Nov 2019 01:03 PM
எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் ’டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படத்துக்கு 100 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெர்மினேட்டர் படங்களின் வரிசையில் ஆறாவது படமாக கடந்த வாரம் வெளியாகியுள்ள படம் ’டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’.
அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஜேம்ஸ் கேமரூனின் கதை, டெட்பூல் இயக்குநர் டிம் மில்லரின் இயக்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம் தொய்வான திரைக்கதை, வலுவில்லாத காட்சியமைப்புகளால் உலகம் முழுவதும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
சில விமர்சகர்கள் ஒருபடி மேலே சென்று இந்தப் படம் எடுக்கப்படாமலே இருந்திருக்கலாம் என்றும் கடுமையாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் ’டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பு செலவு சுமார் 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது தவிர படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் ஏறக்குறைய 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்மறை விமர்சனங்களாலும், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததாலும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள பாரமவுண்ட், ஸ்கைடான்ஸ், டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கு சுமார் 100 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்கவேண்டுமெனில் ’டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படம் 450 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தாக வேண்டும் எனவும், ஆனால் உலக அளவில் 180 முதல் 200 மில்லியன் டாலர்களே இந்தப் படம் வசூலிக்கக் கூடும் எனவும் ஹாலிவுட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT