Published : 31 Dec 2014 12:44 PM
Last Updated : 31 Dec 2014 12:44 PM
வட கொரிய அதிபரை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 'தி இன்டர்வியூ' திரைப்படத்தின் டி.வி.டி-க்களை பலூன்களில் கட்டி வட கொரியாவுக்குப் பரப்ப, அதன் பகை நாடான தென் கொரியாவின் சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் 'தி இன்டர்வியூ' திரைப்படம் பல சர்ச்சைகளைத் தாண்டி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியானது.
அமெரிக்க புலனாய்வு மையத்தின் உத்தரவோடு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ பத்திரிகை நிருபர்கள் இருவர் நேர்காணலுக்காக சந்தித்து, பின்னர் அவரை படுகொலை செய்ய திட்டமிடுவது என்ற கதையைக் கொண்ட இந்தப் படம், முழுக்க முழுக்க கிம் ஜோங்கை கோமாளித்தனமான சர்வாதிகாரியாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தால் அமெரிக்கா - வட கொரியா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
சோனி பிக்சர்ஸ் தயாரித்து சர்வதேச அளவில் சர்ச்சையில் சிக்கி, பின்னர் தாமதமாக முன்வந்து வெளியிட்ட 'தி இன்டர்வியூ' திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் இணையத்தில் மட்டும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் அமெரிக்க டாலர் வருமானத்தை அள்ளிக் குவித்திருக்கிறது.
இதன்மூலம் சோனி நிறுவனம் இதுவரை இணையத்தில் வெளியிட்ட திரைப்படங்களிலேயே அதிக அளவு வருமானத்தை ஈட்டிய திரைப்படம் என்கிற பெருமையை 'தி இன்டர்வியூ' திரைப்படம் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் அதிபர் கிம் ஜோங்கை மையப்படுத்திய இந்தப் படத்தை ஏதேனும் ஒரு வழியில் வட கொரியாவில் பரப்ப வேண்டும் என்று அந்நாட்டுக்கு எதிராக செயல்படும் தென் கொரிய அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் 'தி இன்டர்வியூ' திரைப்படம் கொண்ட டி.வி.டி. மற்றும் யூ.எஸ்.பி ட்ரைவ்களை பலூன்களின் மூலம் வடக்கு நோக்கி அனுப்ப உள்ளதாக தென் கொரிய நாட்டு ஆர்வலர் பார்க் சாங் ஹக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் பார்க் சாங் ஹக் கூறுகையில், "முதலில் சுமார் 1 லட்சம் டி.வி.டி. மற்றும் யூ.எஸ்.பி ட்ரைவ்களை அடுத்த மாதத்துக்குள் வட கொரியா நோக்கி பலூன்கள் மூலம் பறக்கவிடப் போகிறோம். இதனால் வட கொரிய மக்களுக்கு இந்தப் படம் பெரிய அளவில் சென்றடையும்.
தன்னை மிகப் பெரிய ஆளுமையாக எண்ணிக்கொண்டு இருக்கும் கிம் ஜோங்கின் முகத்திரை, அந்த நாட்டில் கிழித்தெரியப்படும்" என்றார்.
கொரிய பிரிவினைக்கு பிறகு, வட கொரியா மற்றும் தென் கொரியா பகை நாடுகளாகவே இருந்து வருகின்றன. அவ்வப்போது தாக்குதல்களை நடத்தும் இவர்கள் தங்களது கண்டனங்களை பலூன்கள் மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், தற்போது தென் கொரியாவில் திட்டமிடப்பட்டுள்ள 'தி இன்டர்வியூ' படத்தின் பலூன் பிரச்சாரத்தை வட கொரியா தக்க வகையில் எதிர்கொள்ள முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT