Last Updated : 27 Dec, 2014 05:32 PM

 

Published : 27 Dec 2014 05:32 PM
Last Updated : 27 Dec 2014 05:32 PM

எக்சோடஸ் படத்துக்கு எகிப்து நாட்டில் தடை

உலகின் பல நாடுகளிலும் சமீபத்தில் ‘எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்' எனும் ஹாலிவுட் திரைப் படம் வெளியானது. இந்தியா உட்பட பல நாடுகளில் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு எகிப்து தடை விதித்துள்ளது.

கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு ‘எக்சோடஸ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எகிப்தில் இருக்கும் இஸ்ரேல் நாட்டு அடிமைகளை மோசஸ் என்பவர் செங்கடல் வழியாக அழைத்துச் சென்று அவர்களைக் காப்பாற்றினார் எனும் விவிலியத் தகவல்தான் இந்தப் படத்தின் மையக் கருத்து ஆகும்.

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில், கிறிஸ்டியன் பேல் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வரலாற்றுத் தகவல்களுக்கு முரணாகப் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. உதாரணத்துக்கு, அடிமைகளை மோசஸ் செங்கடல் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியில் கடல் இரண்டாகப் பிரிந்து அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வந்த ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்' உட்பட வேறு சில திரைப்படங்களில் இந்தச் சம்பவம் ஒரு தெய்வீக அதிசயத் தால் கடல் இரண்டாகப் பிரிந்தது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் மக்களிடையே பெரும் வரவேற்பை அத்திரைப்படங்கள் பெற்றிருந்தன.

ஆனால் இத்திரைப்படத்தில் கடல் இரண்டாகப் பிரிந்தது ஓர் இயற்கை நிகழ்வுபோல் காட்டப்பட்டுள்ளது. கடல் இயற்கையாகவே உள்வாங்கிக் கொண்டதால் அவர்களுக்கு வழி ஏற்பட்டது என்பதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிறிஸ்தவ அமைப்புகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலும், மோசஸ் தன் கையில் குச்சிக்கு பதிலாக வாள் போன்ற ஓர் ஆயுதத்தை ஏந்தியிருப்பது போலவும், எகிப்தில் உள்ள பிரமிடுகளை எல்லாம் மோசஸ் மற்றும் யூதர்கள்தான் எழுப்பினார்கள் என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் எகிப்தில் பலரும் இத்திரைப்படத்தை எதிர்த்து வந்தனர். இந்நிலையில், இது குறித்து விசாரிக்க எகிப்திய கலாச்சாரக் குழு தலைவர், திரைப்படத் தணிக்கைக் குழு தலைவர் மற்றும் இரண்டு வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எகிப்தில் இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, எகிப்திய கலாச்சார அமைச்சர் கபர் அஸ்போர் கூறும்போது, "இது சியோனிஸ பார்வையைக் கொண்ட திரைப்படம். மேலும், இதில் வரலாற்றுத் தகவல்களுக்கு முரணாக நிறைய காட்சிகள் இருக்கின்றன. எனவே இத்திரைப்படத்தைத் தடை செய்கிறோம்" என்றார்.

முன்னதாக இதே காரணங் களைக் கூறி மொராக்கோ இப்படத்திற்குத் தடை விதித்துள்ளது. எகிப்தில் ஏற்கெனவே ‘தி டா வின்சி கோட்' திரைப்படத்தின் பல காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x