Published : 24 Dec 2014 02:17 PM
Last Updated : 24 Dec 2014 02:17 PM
பல சர்ச்சைகளுக்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள 'தி இன்டெர்வுயூ' திரைப்படத்தை சோனி நிறுவனம் நாளை வெளியிடுகிறது. சோனி நிறுவனத்தின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நமது நாட்டில் கருத்துரிமைக்கு இடம் உள்ளது. சோனி பிக்சர்ஸின் முடிவு வரவேற்கத்தக்கது. திரைப்படத்தை பார்ப்பதும் பார்க்காமல் தவிர்ப்பதும் பார்வையாளர்களின் உரிமை. தயாரான படத்தை உரிய நேரத்தில் வெளியிடுவதே நிறுவனதின் மேன்மை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தி இன்டெர்வியூ'. அமெரிக்க புலனாய்வு மையத்தின் உத்தரவோடு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ பத்திரிகை நிருபர்கள் இருவர் நேர்காணலுக்காக சந்தித்து, பின்னர் அவரை படுகொலை செய்ய திட்டமிடுவதே இந்த படத்தின் மைய கதை.
கிம் ஜோங்காக ராண்டல் பார்க் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை சோனி நிறுவனம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தின் மீது சில ஹேக்கர்கள் இணையம் வழியாக தாக்குதல் நடத்தினர். சோனி நிறுவனத்தின் சுமார் 3,000 ஊழியர்களின் தகவல்கள் மற்றும் பல புதிய படங்களின் கோப்புக்களும் திருடப்பட்டதும் அல்லாமல் இந்த படம் வெளியானால் தியேட்டர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த ஹேக்கிங் வட கொரியாவிலிருந்த நடத்தப்பட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்தது. ஹேக்கிங் நடவடிக்கையை ஏற்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, இது போருக்கு இணையானது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை அடுத்து வடகொரியா குறித்த தவறான தகவல்களை பரப்புவதை அமெரிக்க அதிபர் ஒபாமா நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டல் அமெரிக்கா மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ஹேக்கிங் மற்றும் மிரட்டல்களால் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த படத்தை வெளியிடப்போவதில்லை என்று சோனி பிக்சர்ஸ் தெரிவித்த நிலையில், இந்த படத்தை அறிவித்தபடி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடும் முடிவை சோனி பிக்சர்ஸ் எடுத்துள்ளது. அத்துடன், திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்ல என்று தியேட்டர் உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT