Published : 27 Nov 2014 03:56 PM
Last Updated : 27 Nov 2014 03:56 PM
நீண்ட காலமாக பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருந்த 'இண்டிபெண்டன்ஸ் டே' படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்புக்கு, ட்வென்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் பச்சை கொடி காட்டியுள்ளது. 'இண்டிபெண்டன்ஸ் டே ஃபாரெவர் பார்ட் 1' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், 2016-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1996-ம் ஆண்டு வெளியான 'இண்டிபெண்டன்ஸ் டே' திரைப்படம், உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. ஏலியன்கள் பூமியை கைப்பற்றும் நோக்கத்தோடு, இங்கு மேற்கொள்ளும் தாக்குதல்களை மையமாக வைத்து இந்தப் படம் இயக்கப்பட்டிருந்தது. கிராபிக்ஸில் சிறந்த படமாக, முதல் பாகம், இன்றளவும் ஹாலிவுட்டில் நினைவுகூரப்படுகிறது.
'காட்ஸில்லா', 'டே ஆஃப்டர் டுமாரோ', '2012' உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கும் முன்னர், இயக்குநர் ரோலண்ட் எமெரிக் இயக்கிய திரைப்படம் இது.
தற்போது இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ரோலண்ட் எமெரிக் இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாகத்தின் நாயகனான வில் ஸ்மித் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை. பட்ஜெட் காரணமாக அவர் இதில் நடிக்கவில்லை என ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத் தயாரிப்பு குறித்து "பட்ஜெட், கால அட்டவணை மற்றும் நடிகர்களை மனதில் வைத்து திட்டமிடுவது தினசரி போராட்டம்" என்று இயக்குநர் ரோலண்ட் எமெரிக் கூறியுள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு முடிந்ததும், 2015-ம் வருடம் மே மாதம் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு, ஜுன் மாதம் 24 தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT