Published : 18 Nov 2025 01:35 PM
Last Updated : 18 Nov 2025 01:35 PM

த தின் மேன் கோஸ் ஹோம்- 1944: ஓவியத்தில் ஒற்று ரகசியம் | ஹாலிவுட் மேட்னி 6

‘த தின்மேன்’தொடரின் ஐந்தாவது படைப்பு ‘த தின் மேன் கோஸ் ஹோம்- 1944’. ஓய்வெடுக்கச் சென்றவர் ஓவிய(னின் மரண)த்தில் ஒளிந்திருக்கும் ஒற்று ரகசியத்தை கண்டறிவதே ஒருவரிக் கதை. நிக், தனது மனைவி நோரா, செல்ல நாய் அஸ்டாவுடன் ‘சிகமோர் ஸ்பிரிங்ஸ்’என்ற சொந்த கிராமத்துக்கு வருகிறார்.

வாஞ்சையுடன் வரவேற்கிறார் அம்மா. அப்பா டாக்டர் பெர்ட்ரம் சார்லஸுக்கு நிக் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். புல்வெளியில் ஊஞ்சல் கட்டி படுத்தபடி, நோராவிடம் பழைய நினைவுகளை அசை போடுகிறார் நிக்.

பால்ய நண்பன் டாக்டர் புரூஸ் கிளேவொர்த், ஸ்கூல் டீச்சர் மிஸஸ் பீவி, மருமகன் வில்லோபீ, நாடக ஸ்கூலில் நடிப்பு கற்கும் இளம்பெண் லாரா பெல் ஆகியோர் நிக்கைப் பார்க்க வருகிறார்கள். ஒரு கேஸ் விஷயமாக வந்திருக்கிறார் என்று ஒருவரிடம் லாரா பெல் கிசுகிசுக்க, அவர் தெரிந்த பெண்ணிடம், பேக்கரிக்காரனிடம், சலூன்காரனிடம், முடிவெட்ட வந்தவரிடம் என இத்தகவலைச் சொல்ல, அது செய்தித்தாளிலும் வெளியாகிறது. அதைப் படித்த உள்ளூர் மோசடி பார்ட்டிகள் டென்ஷனாகிறார்கள்.

வதந்தியின் விளைவு, பீட்டர் பெர்டன் என்ற ஓவியன் நிக்கின் வீடு தேடி வருகிறான். ‘ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்’ என்று ஆரம்பிப்பவன், குண்டடிபட்டு குப்புற விழுந்து செத்துப் போகிறான். போலீஸ் அதிகாரி மெக் க்ரேகர் இந்த கேஸில் உதவும்படி கேட்க, நிக் ‘ஓய்வெடுக்க வந்திருக்கிறேன்’ என்று மறுத்துவிடுகிறார். ஆனால் யாருக்கும் தெரியாமல் பீட்டரின் வீட்டைச் சோதனையிடுகிறார். மறைந்திருக்கும் பீட்டரின் அம்மா கிரேசி மேரி ஓர் ஆயுதத்தால் தாக்க, நிக் மயங்கி விழுகிறார்.

நோரா, கணவனின் பிறந்தநாள் பரிசாக ஒரு காற்றாலை பெயின்டிங்கை வில்லி க்ரம்ப் என்ற வயதான கடைக்காரரிடம் போராடி வாங்குகிறாள். எட்கர் ட்ரேக் என்பவன் நோராவை பின்தொடர, நோரா ஒரு கிளப்பில் அவனை மடக்கி விசாரிக்கும்போது, ‘அந்த ஓவியத்துக்காக தொடர்கிறேன், 500 டாலர் தருகிறேன்’ என்கிறான்.

‘60 டாலர் ஓவியத்துக்கு ஐநூறு டாலரா? என்று அதிர்ச்சியடைந்த நோரா, நிக்கிடம் சொல்கிறாள். இருவரும் வில்லி க்ரம்பை சந்திக்க, ‘அந்த பெயின்டிங்கை வரைந்த பீட்டர் கொல்லப்பட்டுட்டான். எல்லாரும் அந்த ஓவியத்தையே தேடி வருகிறார்கள். முதல்ல அந்த அழகான லேடி. அப்புறம் சாம் ரோன்சன். இப்ப நீங்க?” என்கிறார்.

டாக்டர் கிளேவொர்த்துடன் பீட்டரின் வீட்டுக்கு மீண்டும் வருகிறார் நிக். கிரேசி மேரி நீண்ட துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கிறாள். முதலில் மகன், பிறகு தாய், கொன்றது யார்? ஏன்? தின்மேனின் ஐகானிக் கிளைமாக்ஸான ஒரே இடத்தில் ஒன்று திரட்டி விசாரிப்பது இம்முறை அப்பாவின் லேபரட்டரியில் நடக்கிறது.

எட்கர் ட்ரேக், ஹெலீனா ட்ரேக், வில்லி க்ரம்ப், ப்ரோகன், வில்லோபீ, பெரும்பணக்காரர் சாம் ரோன்சன், நிக்கை ஊரைவிட்டுத் துரத்துவதில் குறியாக இருக்கும் டாடம் என்று சந்தேகப்படுபவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட, நிக் ஏன் இவ்வளவு கூட்டம் கூட்டுகிறான்? என்று அப்பாவுக்கே புரியவில்லை. நிக், வந்திருப்பவர்களின் துப்பாக்கியை போலீஸாரின் உதவியுடன் பறிமுதல் செய்கிறார். ஃபுளோரோஸ்கோப் கருவியில் காற்றாலை ஓவியத்தை சொருக – அதில் ராணுவ விமானத்தின் புரொபல்லரின் புளூ பிரின்ட் தெரிகிறது.

இந்த ரகசியத்தை பீட்டர் ஐந்து ஓவியங்களில் வரைந்து வைக்கிறார். அதை ஒரு கும்பல் பெரிய விலைக்கு விற்க முயற்சிக்கிறார்கள். ஓய்வெடுக்க வந்த நிக்கிடம் உண்மையைச் சொல்ல வந்த பீட்டரை கொன்று விடுகிறார்கள். கொன்றவன் யார் என்பதை நிக் அம்பலப்படுத்தும் போது அதிர்ச்சியாக இருக்கும்.

ரொம்பவும் சென்டிமென்ட், எமோஷனல் நிறைந்த கிளைமாக்ஸ். இதிலும் ஒரு சின்ன செய்கையில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படுகிறான். கிரேசி மேரி வீட்டுக்கு முதலில் போகும்போது கதவைத் தட்டிய நபர், அடுத்தமுறை தட்டவில்லை. ஏனென்றால் செத்துப் போனவள் வந்து கதவைத் திறக்கப் போவதில்லை.

டாக்டர் பெர்ட்ரம் `கிரேட் ஒர்க் நிக்’ என்று பெருமிதப்படுகிறார். ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ புன்னகை அவர் முகத்தில். நிக்கிற்கு கேஸை கண்டுபிடித்ததைவிட அப்பாவின் சந்தோஷத்தையே பெரிதாக எண்ணி மகிழ்வதாக படம் முடிகிறது. ஓவியத்தை கண்டுபிடித்த அஸ்டாவுக்கு ‘எக்ஸ்ட்ரா எலும்பு’ என்று நோரா சொன்னவுடன் முன்னங்காலைத் தூக்கி நன்றி சொல்வது, நிக்கின் சரக்கை தெரியாமல் ஸ்ட்ரா போட்டுக் குடிப்பது என அஸ்டாவின் குறும்பு இதிலும் உண்டு. நிக்கின் சாகசங்களை அப்பாவிடம் நோரா விவரிக்கும் தொனியை `காதலிக்க நேரமில்லை' நாகேஷ், பாலையாவிடம் கதை சொல்வதை ரசித்ததுபோல் ரசிக்கலாம்.

பீட்டரின் வீட்டை நிக் சோதனையிடும் காட்சி முழுவதையும் நிழல் உருவமாகக் காட்டியிருப்பது சஸ்பென்ஸை அதிகப்படுத்துகிறது. ஒளிப்பதிவு கார்ல் பிரண்ட். வதந்தி பரவும் விதத்தை, வசனமே இல்லாமல் ‘டிஸ்ஸால்வ் ஷாட்’டுகளுடன் விறுவிறுப்பான இசையில் (டேவிட் ஸ்னெல்) காட்சிப்படுத்தியிருக்கும் உத்தி ரசிக்க வைக்கும்.

எடிட்டிங் ரால்ப் ஈ வின்டர்ஸ். ரால்ப் விண்டர்ஸ். முந்தைய நான்கு தின்மேன் வரிசைப் படங்களை இயக்கிய டபிள்யூ.எஸ். வான் டைக் இறந்து விட்டதால் ராபர்ட் தோர்ப் இயக்கினார். டேஷியல் ஹேம்மெட்டின் கதாபாத்திரங்களை வைத்து ஹாரி கர்னிட்ஸோடு இணைந்து கதை எழுதிய ராபர்ட் ரிஸ்கின், திரைக்கதையை ட்வைட் டெய்லரோடு சேர்ந்து எழுதினார். எம்ஜிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பில் இன்று பார்ப்பவர்களுக்கும் இது அழகான ரெட்ரோ அனுபவம்.

- ramkumaraundipatty@gmail.com

(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)

முந்தைய அத்தியாயம் > ஷேடோ ஆஃப் த தின் மேன் - 1941: கவனக் குறைவால் சிக்கும் கொலையாளி - ஹாலிவுட் மேட்னி 5

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x