Published : 11 Nov 2025 01:16 PM
Last Updated : 11 Nov 2025 01:16 PM
‘த தின்மேன்’ தொடரின் 4-வது படம், ஷேடோ ஆஃப் த தின் மேன் (Shadow of the Thin Man – 1941). கொலையைக் கண்டுபிடிக்கச் சொன்னவர்தான், கொலையாளி என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் லைன். நிக், ஓய்வு நேரத்தைக் கழிக்க, மனைவி நோராவுடன் குதிரைப் பந்தயம் நடக்குமிடத்துக்குச் செல்கிறார். அங்கு குளியலறையில் ஒரு ‘ஜாக்கி’ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
போலீஸாரும், பத்திரிகையாளர்களும் பரபரப்பாகக் கூடியிருக்க, லெப்டினன்ட் ஏப்ரம்ஸ் அந்த கேஸை விசாரிக்கிறார். பந்தயக் குழுவின் துணை இயக்குநராகப் பதவி ஏற்றிருக்கும் மேஜர் ஸ்கல்லியும் , பால் என்ற பத்திரிகை நிருபரும் ஜாக்கியின் கொலையைச் விசாரிக்கச் சொல்லி, நிக்கின் வீடு தேடி வருகிறார்கள். சூதாட்டக் குழுவை நடத்தும் லிங்க் ஸ்டீபன்ஸ் மற்றும் ஃபிரட் மேஸியுடன் ஜாக்கி ஒத்துப் போகாததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியை வைத்து நிக் விசாரிக்கிறார்.
ஸ்டீபன்ஸிடம் செக்ரட்டரியாக வேலை பார்க்கும் காதலி மோலியின் தகவலை வைத்து ஸ்டீபன்ஸின் அலுவலகத்துக்குச் செல்லும் பால், அங்கு சட்ட விரோத பந்தயக் குறிப்புகள் அடங்கிய கருப்பு நோட்டுப் புத்தகத்தைக் கண்டுபிடிக்கிறார். திடீரென வந்த ஸ்டீபன்ஸின் விசுவாசியான பத்திரிகையாளர் வைட்டி பரோ, பாலிடம் கைகலப்பில் ஈடுபட்டு வெளியேறும்போது ஒரு மர்மநபரால் சுடப்படுகிறார்.
கொலை நடந்த நேரம், ரெயின்போ பென்னி என்ற சூதாட்டக்காரன் தப்பிச் சென்றதாக வாட்ச்மேன் சொன்னதை வைத்து நிக், பென்னியின் வீட்டுக்கு மேஜர் ஸ்கல்லி மற்றும் ஏப்ரம்ஸ் உடன் செல்கிறார். பென்னி, தூக்கில் தொங்குகிறான். ஒரு கொலையை விசாரிக்கும்போது அடுத்தடுத்து நிகழும் மரணங்கள். அதன் நிழலில் மறைந்திருக்கும் ‘கேம்ப்ளிங் சிண்டிகேட்’.
‘தின்மேன்’ தொடருக்கே உரித்தான அனைவரையும் ஒன்றாக வரவழைத்து விசாரிக்கும் கிளைமாக்ஸ். சூதாட்ட புரோக்கர்கள், முதலாளிகள், பத்திரிகையாளர்கள், காதலிகள், நிழல் மறைவு பெண்கள் என அத்தனை கதாபாத்திரங்களும் சந்தேக நபர்களாக மாற்றப்பட்டு லெப்டினென்ட் அலுவலகத்துக்கு வரவழைக்கப்படுகிறார்கள். நிக் வழக்கம்போல ஒவ்வொருவரிடமும் கேள்விக் கணைகளைத் தொடுத்து உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார்.
பென்னி, கொல்லப்பட்ட அன்றுதான் புது வீட்டுக்கு மாறியிருக்கிறான். அதை மறந்து பென்னியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றவரை, நிக் குற்றவாளியாக்குகிறார். சின்ன கவனக் குறைவால் கொலையாளி மாட்டுகிறார். ‘தின்மேன்’ சீரிஸில் வரும் கொலையாளிகளைப் பார்க்
கும் போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். கூட இருப்பவர்களே யூகிக்க முடியாத அளவில் குற்றவாளிகளாக இருப்பார்கள்.
இந்தக் கதையில் நோராவின் பங்கு அதிகம். நோரா கொலை நடந்த இடத்தில் ஒரு லாண்டரி ஸ்லிப்பை எடுக்க, அதில் கிமானோஸ், சிம்மிஸ் என்று எழுதப்பட்டிருக்கும் பெண்களின் உடை விஷயங்களை வைத்து கான்சாஸ் சிட்டி, சிகாகோ என்று சூதாட்ட புக்கிகள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்.
ஜாக்கியின் கொலை நடந்த இடத்துக்கு அஸ்டாவுடன் வரும் நிக் ‘மோனோ ஆக்டிங்’ செய்து அது கொலை அல்ல, விபத்து என்று விளக்குகிறார். அதேபோல் ரெயின்போ பென்னியின் தற்கொலையை, கொலை என்று நிரூபிப்பதும் ஆச்சரியப்பட வைக்கிறது. கொலையை விசாரிக்க அழைத்தவரே கொலையாளி என்று நிக் குற்றம் சாட்டுவதெல்லாம் அக்மார்க் இன்வெஸ்டிகேஷன்.
கிளைமாக்ஸில் நிக்கின் துப்பாக்கியை எடுத்து வில்லன் சுட முயற்சிக்க, நோரா நிக்கின் முன்னால் நின்று மறைத்துக் கொள்கிறாள். ஏப்ரம்ஸ் அந்த துப்பாக்கியைப் பிடுங்கி விடுகிறார். ஆனால் அந்த துப்பாக்கியில் குண்டு இல்லை. அதற்கு நிக் சொல்லும் காரணம் ஒவ்வொரு தகப்பனும் குழந்தை வளர்ப்பில் தெரிந்து கொள்ளவேண்டிய பாடம்.
குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் தரையில் உருண்டு புரள்வது. ராட்டினத்தில் நிக்கி ஜூனியருடன் ரவுண்டு அடித்துவிட்டு ஒரு சுவரைப் பிடித்து மயங்கி கிடப்பது என அஸ்டா செய்யும் சேட்டைகள் அபாரம்! ரெஸ்டாரன்டில் ஒரு பேரர் கால்களுக்கிடையே புகுந்து ஓடி, அவன் தடுமாறி ஒருவர் மேல் விழ ஆளாளுக்கு அடித்துக் கொண்டு சின்ன போர்க்களம்போல் அந்த இடம் மாற, பவ்யமாக வந்து பதுங்கும் அஸ்டாவிடம் ‘என்ன நடந்துன்னே உனக்குத் தெரியாதுல்ல’ என்று நிக் கேட்பதெல்லாம் காமெடியின் உச்சம்.
எப்போதும் பெக்கும், கையுமாக அலையும் நிக்கிடம் மகன் ‘டாடி ட்ரிங்க் மில்க்’ என்று உத்தரவு போடுவதும், நிக் தவிர்ப்பதும், நோரா ரசிப்பதும், வேலைக்காரி ஸ்டெல்லா முழிப்பதும் ரசனையான காட்சி. ஒளிப்பதிவு வில்லியம் டேனியல்ஸ். நிக்கும் நோராவும் காரில் பயணம் செய்யும் காட்சி, ரெஸ்லிங் போட்டியின் பிரம்மாண்டம், ரெஸ்டாரன்ட் கலாட்டா, நிக்கி ஜூனியர் ராட்டினத்தில் சுற்றுவது, அதிலும் ரெயின்போ பென்னி கொல்லப்பட்ட காட்சி முழுவதையும் ‘சில் அவுட்’டிலேயே காட்டியிருப்பது என படம் முழுக்கவும் விஷுவல் மேக்கிங்தான்.
முதல் மூன்று படங்களுக்கும் கதை எழுதிய டேஷியல் ஹேம்மெட், சொந்த காரணங்களால் தொடர முடியாமல் போக, அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து ஹாரி கர்ட்னிட்ஸ் கதை எழுதியதோடு இர்விங் பிரீச்சர் என்பவரோடு இணைந்து திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.
இசை டேவிட் ஸ்னெல். கதையின் விறுவிறுப்பைக் கூட்டும் எடிட்டிங் ராபர்ட் ஜே கென். எம்.ஜி.எம் தயாரித்த இப்படத்தை மேஜர் டபிள்யூ. எஸ். வான் டைக் இயக்கியுள்ளார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க கடற்படையில் பணியாற்றியதால் இயக்குநர் தன் பெயருக்கு முன் மேஜர் என்பதை இணைத்துக் கொண்டார். கருப்பு, வெள்ளை பட ஆர்வலர்கள் ஒரு பொன்மாலை நேரத்தில் இந்த தின்மேனின் நிழலில் இளைப்பாறலாம்.
- ramkumaraundipatty@gmail.com
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
முந்தைய அத்தியாயம் > அனதர் தின்மேன் - 1939: கனவில் நடக்கும் கொலை! - ஹாலிவுட் மேட்னி 4
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT