Published : 04 Nov 2025 02:10 PM
Last Updated : 04 Nov 2025 02:10 PM
‘த தின்மேன்’ வரிசையில் 3 -வது படம், ‘அனதர் தின்மேன்’. விருந்துக்கு அழைத்தவர் கொல்லப்படுவதும், அழைக்கப்பட்டவர் கொலையாளியைக் கண்டுபிடிப்பதும்தான் ஒன் லைன். நோராவின் அப்பாவுக்கு நண்பர் மற்றும் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் கர்னல் மெக்ஃபே, வார இறுதி பார்ட்டிக்கு அழைப்பு விடுக்கிறார்.
நிக் சார்லஸ், நோரா, குட்டி மகன் நிக்கி ஜூனியர், செல்ல நாய் அஸ்டாவுடன் ‘லாங் ஐலண்ட்’ மாளிகைக்கு செல்கிறார்கள். மெக்ஃபே, தனது வளர்ப்பு மகள் லோய்ஸை நிக்கிற்கு அறிமுகப்படுத்துகிறார். அவள் தனது வருங்காலக் கணவர் ‘டட்லி ஹார்ன்’ மற்றும் செக்ரட்டரி கோல்மேனை அறிமுகம் செய்கிறாள்.
அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிடும்போது கர்னல் மெக்ஃபே, பத்து வருடங்களுக்கு முன்பு அவரிடம் வேலை பார்த்த பில் சர்ச் என்பவன் தான் கொல்லப்படுவதாக அடிக்கடி கனவு காண்கிறான் என்பதைச் சொல்லிக் கோபப்படுகிறார். அப்போது நீச்சல் குளம் அருகே தீப்பற்றி எரிவதாக வேலைக்காரி மிஸஸ் பெல்லம் சொல்ல, வெளியில் லோய்ஸின் நாய் கழுத்தறுபட்டு இறந்து கிடக்கிறது.
பில்லின் வீட்டிற்குச் சென்று ‘கனவு’ பற்றி கேட்கிறார், நிக். அவன் “இன்னைக்கி காலைல மூன்றாவது கனவு. மெக்ஃபே கழுத்தறுபட்டு இறந்து கிடந்தார். உன் மனைவியும், குழந்தையும்கூட என் கனவுல வருவாங்க” என்கிறான். நிக், அவனை பளாரென அறைந்து “என் ஃபேமிலி பற்றி கனவு காணாத!” என்று எச்சரித்துவிட்டுச் செல்கிறார்.

நிக்கி ஜூனியர் தூக்கம் வராமல் முனக, அஸ்டா எழுந்து அவனுடன் விளையாடுகிறது. தூக்கம் கலைந்த நோராவும் குழந்தையைத் தூக்கி கொஞ்சுகிறாள். “உங்க பேச்சுக் குரல் கேட்டது” என்றபடி லோய்ஸ் உள்ளே வருகிறாள். நிக்கும் படுக்கையிலிருந்து எழ, திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம். அனைத்து விளக்குகளும் அணைகின்றன. நிக் மெழுகுவர்த்தியுடன் ஓர் அறைக்குள் செல்ல, ஒரு விளக்கு விழுந்து கிடக்கிறது. மெக்ஃபே இறந்துக் கிடக்கிறார். அடுத்த நிமிடம் பைக்கிலும், ஜீப்பிலும் போலீசார் வந்திறங்குகிறார்கள்.
போலீஸார், பில் வீட்டை முற்றுகையிட, அவனைக் காணவில்லை. பில்லை குற்றவாளி என அறிவித்து ரேடியோவில் செய்தி பறக்கிறது. ஃபோட்டோக்கள் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அஸ்டா, ரத்தம் தோய்ந்த கத்தியைக் கண்டெடுக்கிறது. வீட்டைச் சுற்றிலும் இருக்கும் போலீஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் அலைந்த டட்லி ஹார்னை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

பில்லின் காதலி ‘ஸ்மிட்டி’யிடம் நிக் விசாரிக்க, பில்-லைப் பற்றித் தெரியாது என்கிறாள். ஸ்மிட்டியின் வீட்டில் ‘வெஸ்ட் இண்டீஸ் கிளப் கார்டு’ இருப்பதைக் கவனித்த நிக், அந்த கிளப்புக்குச் செல்கிறார். மேற்கிந்திய கலாச்சார நடனம் நடைபெறுகிறது. அங்கு அறிமுகமாகும் குண்டு நபர், பில்லிற்கும், லிண்டா மில்ஸ் என்ற பெண்ணுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி பேசுகிறான். நிக், நோராவுடன் லிண்டா மில்ஸை சந்திக்கச் செல்கிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்காரி மட்டும் இருக்கிறாள்.
பில்-லை பல இடங்களில் நிக் தேடிக் கொண்டிருக்கும்போது நிக், நோராவைத் தேடி வருகிறான், பில். “நான் மூணு தரம் கனவு கண்டா அவங்க செத்து போயிடுவாங்க. நிக் எனக்கு ரெண்டு தரம் கனவு வந்துச்சு. மிஸஸ் சார்லஸ் நீங்க விதவை ஆயிடாதீங்க” என்று பாக்கெட்டில் துப்பாக்கி இருப்பதுபோல் மிரட்டிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறும்போது துப்பாக்கிச் சத்தம். மெக்ஃபேயை கொன்றதாகத் தேடப்படும் குற்றவாளி பில் கொல்லப்படுகிறான். கொன்றது யார்?
தின்மேன் சீரிஸின் ஹைலைட்டான, அனைவரையும் வரவழைத்து விசாரிக்கும் கிளைமாக்ஸ், இந்தமுறை நிக்கி ஜூனியரின் முதலாவது பிறந்தநாள் விழாவில் நடக்கிறது. வந்திருப்பவர்கள் அனைவரும் கைக்குழந்தையுடன் கலந்து கொள்கிறார்கள். அந்த இடமே கலகலப்பாக இருக்கிறது.
போலீஸார் முன்னிலையில் நிக் விசாரணையை ஆரம்பிக்கிறார். கொலையாளி மெக்ஃபேயை கொன்றபிறகு, ஐந்து நிமிடம் கழித்துதான் வெடிக்கும்சத்தம் கேட்டது. இது கொலையாளி தப்பிப்பதற்காக ஏற்படுத்திய நேரம் என்று ஸ்டேண்டிங் விளக்கு வைத்து செய்முறை விளக்கம்காட்டுகிறார்.
லிண்டா மில்ஸ், லோய்ஸ் இரண்டு பேரும் ஒருவரே. லோய்ஸ் வேலைக்காரி பெல்லத்தின் மகள் என்பது எதிர்பாராத ட்விஸ்ட். உண்மைக் குற்றவாளி யார் என்று தெரிய வரும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. மெக்ஃபே கொல்லப்பட்டவுடன் அந்த செய்தி பரவும் விதத்தில் இசையும் (எட்வர்டு வார்டு), காரிலும், பைக்கிலும் போலீஸார் பரபரப்புடன் வீட்டுக்கு வரும் இடத்தில் ஒளிப்பதிவும் (ஆலிவர் டி. மார்ஷ் மற்றும் வில்லியம் டேனியல்ஸ்), போலீஸார் ஒவ்வொருவரையும் தனித்தனியே விசாரிக்கும் காட்சியில் எடிட்டிங்கும் (ஃப்ரெட்ரிக் ஒய். ஸ்மித்), நம்மை பரபரப்பின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
நிக்கி ஜூனியர், அஸ்டாவின் எலும்புத் துண்டைப் பறித்துக் கொள்வதும், அஸ்டா, நிக்கி ஜூனியர் என நினைத்துக் கொண்டு வேறு குழந்தைக்கு காவல் இருப்பதும் நல்ல நகைச்சுவை. நிக்கின் துப்பறியும் ஸ்டைலும், நோராவின் குறும்பும் ரசிக்க வைக்கின்றன.
மூன்றாவது படத்திலும், கதாசிரியர் (டேஷியல் ஹேம்மெட்), திரைக்கதை தம்பதியர் (ஃப்ரான்சிஸ் கூட்ரிச், ஆல்பெர்ட் ஹேக்கெட்), இயக்குநர் (டபிள்யூ எஸ். வான்டைக்), தயாரிப்பு (எம் ஜி எம்) கூட்டணி தொடர்கிறது. ஒரேமாதிரியான கதை, திரைக்கதை அமைப்புகள் இருந்தாலும் வெவ்வேறு பின்புலத்தில் பயணிப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கதையின் மையக் கருத்து இந்தக் காலகட்டத்திலும் பொருந்துவதுதான் கிளாசிக் குற்றப் பட வரிசையில் சேர்க்கத் தூண்டியது.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com
முந்தைய அத்தியாயம் > The Thin Man series : அங்க அடையாளத்தில் சிக்கும் குற்றவாளி | ஹாலிவுட் மேட்னி 3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT