Published : 28 Oct 2025 03:44 PM
Last Updated : 28 Oct 2025 03:44 PM
த தின் மேன் வரிசையில் இரண்டாவது படம், 'ஆஃப்டர் த தின் மேன்' (After the Thin Man-1936). புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொல்லப் பட்டவனின் மர்மத்தை கண்டறிவதுதான் இப்படம். முதல் பாகத்தில் நிக், நோரா தம்பதியர் ஹனிமூனுக்குச் செல்வதோடு முடியும் கதை, இதில் சான்ஃபிரான்சிஸ்கோ வருவதோடு ஆரம்பிக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் நிக்-கைப் பார்க்கும் மக்கள் "தின் மேன் கேஸை கண்டுபிடித்ததால் மறுபடியும் துப்பறியக் கிளம்பி விட்டீர்களா?" என்றெல்லாம் உற்சாகத்துடன் கேட்கிறார்கள்.
“அந்த ஐடியாவே இல்லை” என்று பதிலளிக்கும் நிக்கிற்கு அடுத்த வழக்கு, நோராவின் ஆன்ட்டி வீட்டிலேயே காத்திருக்கிறது. நோராவின் ஆன்ட்டி கேத்தரின் வைக்கும் விருந்தில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் போலீஸ் துறையோடு தொடர்புடையவர் என்பதால் நிக்-கை, கேத்தரினுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஆனாலும் குடும்ப கவுரவம் கருதி வரவழைக்கிறாள்.
நோராவின் கஸின் செல்மா, தன் கணவர் ராபர்ட்டை காணவில்லை என்று நிக்-கிடம் சொல்கிறாள். ராபர்ட் வழக்கமாகச் செல்லும் சீன நைட் கிளப்புக்கு நிக்கும், நோராவும் செல்கிறார்கள். பாலி என்ற நட்சத்திர பாடகியின் துள்ளல் ஆட்டத்தை மொத்தக் கூட்டமும் ரசித்துக் கொண்டிருக்கிறது. ராபர்ட், ஒரு டேபிளில் அமர்ந்திருக்க, நிக்கும், நோராவும் அவனெதிரே அமர்கிறார்கள். செல்மா, அவனைக் காணாமல் கவலைப்படுவதாக நோரா சொல்கிறாள்.

இதையடுத்து செல்மாவின் வீட்டுக்கு வரும் ராபர்ட், தன் உடமைகளை எடுத்துச் செல்கிறான். டேவிட் கிரஹாம் என்பவனுக்கும் செல்மாவுக்கும் ஏற்கெனவே நிச்சயம் செய்து நின்று போயிருக்கிறது. செல்மாவை மறக்க முடியாத டேவிட், பாலிக்கும், ராபர்ட்டுக்கும் தொடர்பு இருப்பதைத் தெரிந்து கொண்டு, செல்மாவை விவாகரத்து செய்தால் 25 ஆயிரம் டாலர் கொடுப்பதாக பேரம்பேச, ராபர்ட்டும் ஒப்புக் கொள்கிறான். ஆனால், பாலியும், கிளப்பின் உரிமையாளர் டான்சர் என்பவனும் ராபர்ட்டின் பணத்தை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.
இந்நிலையில் ராபர்ட், செல்மாவைச் சந்தித்து, ’குட்பை’ சொல்லிக் கிளம்ப, அதிர்ச்சியடைந்த செல்மா துப்பாக்கியுடன் பின் தொடர்கிறாள். பனி படர்ந்த இரவில் புது வருடம் பிறக்கும்போது ராபர்ட் கொல்லப்படுகிறான். கையில் வெடிக்காத துப்பாக்கியுடன் இருக்கும் செல்மா குற்றவாளி என்ற செய்தி பரபரப்பாகிறது. பாலியின் சகோதரன் 'ஃபில்’லைத்தேடி நிக் செல்ல, அவன் கொல்லப்பட்டிருக்கிறான். அவன் வீட்டை நிக் சோதனை போடும்போது, அங்கே மறைந்திருந்த டான்சர், நிக்கை சுடுகிறான்.

குண்டு பட்டு பழைய பெட்டியொன்று திறந்து, அதிலிருந்து ஒரு சடலம் விழுகிறது. அது நோரா அப்பாவின் எஸ்டேட்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டவேலை பார்த்த ‘பேட்ரோ’. ஒரு கொலையை கண்டுபிடிக்கச் சென்று மேலும் இரண்டு கொலைகள். முடிவில் நிக் நோராவிடம் "கொலையைச் செய்தவனை நாளை கண்டுபிடிக்கப் போகிறேன்” என்கிறார்.
தின்மேன் சீரிஸின் 'டெம்ப்ளேட்’ கிளைமாக்ஸ். ஏப்ரம்ஸ் உதவியுடன் அனைத்து சந்தேக நபர்களையும் பாலியின் வீட்டுக்கு வரவழைக்கிறார்கள். அனைவரிடமும் நிக் சில கேள்விகளை வீசுகிறார். பேட்ரோவின் அங்க அடையாளம் பற்றி கேட்கும்போது கிடைத்த க்ளுவில் குற்றவாளி சிக்குகிறான். முதல் பாகத்தில் வைனன்ட்டைக் கொன்றது, உடன் இருக்கும் நபர்.

இதிலும் ராபர்ட்டைக் கொன்றது கூடவே இருக்கும் ஓர் அப்பாவி. முதல் பாகத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பணத்தை அபகரிக்க கொலைகள் நடக்கும். இதில் புது வருடக் கொண்டாட்டத்தில், தான் நேசித்தவளை அடைய நடக்கிறது. ஆஸ்கர் விருது வென்ற ஜேம்ஸ் ஸ்டீவர்ட் என்ற மாபெரும் நடிகர், இதில் டேவிட் என்ற துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பரபரப்புக்கு நடுவே, நிக், நோராவின் கட்டிப்பிடி, முத்தங்கள் நம்மை ரிலாக்ஸ் பண்ணுகின்றன. நோரா, தான் கர்ப்பமாக இருப்பதை நிக்-கிற்கு குட்டி சாக்ஸ் பின்னுவதன் மூலம் சிம்பாலிக்காக உணர்த்துகிறாள்.
அஸ்டா அண்ட் மிஸஸ் அஸ்டா என்று டைட்டில் போடுகிறார்கள். அஸ்டாவுக்குப் பிறந்த பல குட்டிகளில் ஒரு கருப்பு நாய்க் குட்டியும் உண்டு. அப்பா கருப்பு நாய் அவ்வப்போது மிஸஸ் அஸ்டாவைத் தேடி வர, அஸ்டா அதைத் துரத்தி விரட்டி அது வரும் பாதையை மூடி வைக்கும். கல்லில் கட்டி எறியப்பட்ட பேப்பரை அஸ்டா வாயில் கவ்வியபடி நிக், நோராவை அலைக்கழிப்பது விலா நோக வைக்கும் காமெடி.

ஓலிவர் மார்ஷின் இருளும், ஒளியும் கலந்த ஒளிப்பதிவில் காட்சிகளின் சஸ்பென்ஸ் மேலும் அதிகரிக்கிறது. ராபர்ட் கொல்லப்படும் காட்சியில் பனிபடர்ந்த இரவும், ஆரம்பத்தில் வரும் ரயில் விஷுவலும் வியக்க வைக்கும். இசையும், ஒளிப்பதிவும் போட்டிப் போட்டு பரபரப்பாக்குகின்றன.
ஹெர்பர்ட் ஸ்டோதார்ட் மற்றும் எட்வர்ட் வார்டு இசை நைட்கிளப், பார்ட்டி, புத்தாண்டு பாடல் என்று இசை நம்மை குதூகலப் படுத்துவதோடு, தேவைப்பட்ட இடங்களில் பதற்றப்படவும் வைக்கிறது. டபிள்யூ எஸ். வான்டைக் இயக்கியுள்ள இதன் கதாசிரியர் டேஷியல் ஹேமெட். முந்தைய பாகத்துக்கு எழுதிய அதே ஜோடிதான். எம்ஜிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பு. கருப்பு வெள்ளை கிளாசிக் பட விரும்பிகள் இந்தப் படத்தை ரசிக்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
தொடர்புக்கு - ramkumaraundipatty@gmail.com
முந்தைய அத்தியாயம் > த தின் மேன் - 1934: ஒரு வார்த்தையில் சிக்கும் குற்றவாளி | ஹாலிவுட் மேட்னி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT