Published : 14 Oct 2025 11:11 AM
Last Updated : 14 Oct 2025 11:11 AM

த தின் மேன் - 1934: ஒரு வார்த்தையில் சிக்கும் குற்றவாளி | ஹாலிவுட் மேட்னி

கொலை செய்து தலைமறை​வான​தாகக் கருதப்​படும் குற்​ற​வாளியே கொல்​லப்பட்​டிருப்​ப​தைக் கண்​டறிவது​தான், இந்த ‘த தின் மேன்’ படத்​தின் ஒரு வரிக்​கதை. நியூ​யார்க் நகரில் கிளைட் வைனன்ட் (Clyde Wynant) என்ற விஞ்​ஞானி, தன் ஆய்​வுக்​கூடத்​தில் ஒரு புதிய கண்​டு​பிடிப்​பில் மூழ்​கிக் கிடக்​கிறார். அவருடைய மகள் டொரோத்தி தன் காதலனை அறி​முகம் செய்து கல்​யாணம் செய்து கொள்​ளப் போவ​தாகச் சொல்ல, “இவர்ட்ட என்​னப்​பத்​தி, உன்​னப்​பத்​தி, உன் அம்மா பத்​தி, அம்​மாவோட பாய்ஃபிரண்ட் பத்தி சொல்​லிட்​டி​யா?” என்று கேட்​கிறார், வைனன்ட்.

“எல்​லாம் சொல்​லி​யாச்​சு” என்​கிறாள், மகள். “தெரிஞ்​சுமா கல்​யாணம் பண்​ணிக்க விரும்​புறான்” என்று கிண்​டலடிக்​கும் வைனன்ட் வெளியூர் கிளம்​பு​கிறார். அதற்​கு​முன் வங்​கிக்​குச் சென்று லாக்​கரை செக் பண்​ணுகிறார். அதில் எது​வுமில்​லாத கோபத்​தில் செக்​ரட்​டரி ஜூலி​யாவை திட்டி விட்​டுச் செல்​கிறார். பின் திரும்பி வரவே இல்​லை. ஜூலியா கொல்​லப்படு​கிறார். அவளைக் கொன்​று​விட்டு வைனன்ட், தலை மறை​வாகி விட்​டார் என்ற செய்தி பரவு​கிறது.

மூன்று கொலை: நிக்​கும், நோரா​வும் ஒரு கிறிஸ்​து​மஸ் பார்ட்​டி​யில் கலந்து கொள்ள, அங்கு வந்த டொரோத்​தி, தன் தந்​தையை கண்​டு​பிடித்​துத் தரச் சொல்​கிறாள். நிக் ரிடையர்டு ஆனதால் எந்த வழக்​கை​யும் எடுப்​ப​தில்லை என்று மறுக்​கிறார். நோரா​வின் வற்​புறுத்​தலில் வைனன்ட்டை தேடத் தொடங்​கு​கிறார், நிக். வைனன்ட் அடிக்​கடி ஃபோன் செய்து ஜூலி​யா​வுக்குப் பணம் கொடுக்​கும்​படி சொல்​வார் என்​கிறார், வழக்​கறிஞர் மெக்​காலே. ஜூலி​யா​வின் உதவி​யாளர் நன்​ஹைம் என்​பவரும் துப்​பாக்​கி​யால் சுடப்​பட்டு கொல்​லப்​படு​கிறார்.

அந்​தப் பழி​யும் வைனன்ட் மேல் விழுகிறது. நிக், தன் செல்ல நாய் அஸ்​டாவுடன் வாக்​கிங் போவது​போல் வைனன்ட்​டின் கடைக்​குச் சென்று சோதனை​யிட, அஸ்டா ஒரு எலும்​புக்​கூட்​டைத் தோண்டி எடுக்​கிறது. அடை​யாளம் தெரி​யாத சடலத்​தின் உடைகளை வைத்து அது, வைனன்ட்​டின் எதிரி ரோசன்க்​ரீன் என்று போலீ​ஸார் அறிவிக்​கிறார்​கள். மூன்​றாவது கொலை. உண்​மை​யில், அது தலைமறை​வாகி விட்​டார் என்று தேடிக் கொண்டிருந்த வைனன்ட்​டின் உடல் என்​பதை நிக் கண்டு பிடிக்​கிறார்.

டைனிங் டேபிளில் கிளை​மாக்ஸ்: பின்​னர் நிக், ஒரு பார்ட்டி ஏற்​பாடு செய்து சந்​தேக லிஸ்ட்​டில் இருப்​பவர்​களை வரவழைக்​கிறார். டொரோத்​தி, அவளு​டைய வருங்​கால கணவர், வைனன்ட்​டின் மகன், மனைவி மீமி, புக் கீப்​பர் டான்​னர், வழக்​கறிஞர் மக்​காலே, மீமி​யின் புதுக் கணவர், புது மனைவி​யுடன் வரு​கிறார். போலீஸ் துறை மூல​மாக ஒவ்​வொரு​வரும் ஒவ்​வொரு இடத்​திலிருந்து அழைத்து வரப்​படு கிறார்​கள். அங்கே சப்ளை செய்​வர்​களில் பாதிபேர் போலீ​ஸார். மொத்த கிளை​மாக்​ஸும் ஒரு டைனிங் டேபிளில் முடிந்து விடு​கிறது.‘த தின் மேன்’ சீரிஸின் ஹைலைட்டே கிளை​மாக்​ஸில் கும்​பலைக் கூட்​டு​வது​தான்.

நிக்​கும், நோரா​வும் விருந்​துடன் சேர்த்து கேள்வியையும் பரி​மாறிக் கொண்டே வர, இவரா? அவரா? என்று நமக்​குள்​ளும் கேள்வி ஓடிக் கொண்டே இருக்​கும். பதில்​களில் கிடைக்​கும் ஒரு வார்த்​தை​யில், ஒரு பொய்​யில் நிக், குற்ற வாளியை அடை​யாளம் காண்​பது நம்மை ஆச்​சர்​யப்பட வைக்​கும். பெட்​ரூம், பார்ட்​டி, விருந்து என பல இடங்​களி​லும் நிக், நோராவாக நடித்திருக்கும் வில்​லி​யம் பாவல், மிர்னா லாயின் அன்​னியோன்​யம், ரொமான்ஸ் முத்​தங்​கள் பலருக்​கும் காதில் புகையை வரவழைக்​கும்.

குறும்பு வசனங்​கள்: ஏதாவது சத்​தம் கேட்​டாலே ஒளிந்து கொள்​ளும் அஸ்டா ஒரு கட்​ட(ட)த்​தில் உண்​மை​யைத் தோண்டி எடுக்​கிறது. அங்கு புகுந்த எதிரி யிடம் நிக், ‘டேய் அசை​யாதே, என் நாய் உன்​னக் கடிச்​சு, குதறி...’, என்று பயமுறுத்​தும்​போது அஸ்டா ஒரு பைப்​பின் பின்​னால் பம்​மிக் கொண்​டிருக்​கும். அதன்​பிறகு நிக், ‘அவரு உன்ன ஒண்​ணும் பண்ண மாட்​டாரு” என்று அஸ்​டாவை சமா​தானப்படுத்​து​வார். படம் முழு​வதும் சின்​னச் சின்ன குறும்பு வசனங்​களும் அதற்​கான ரியாக் ஷன்​களும் படத்​தின் பரபரப்​புக்கு நடுவே நம்மை புன்​னகைக்க வைக்​கின்​றன.

டேஷியல் ஹேமெட்​–டின் கதைக்கு ஆல்​பர்ட் ஹாக்​கட், பிரான்​சஸ் கூட்​ரிச் ஜோடி திரைக்​கதை எழு​தி​யிருக்​கிறார்​கள். படத்​தில் ஏகப்​பட்ட கதா​பாத்​திரங்​கள் இருந்​தா​லும் கிளை​மாக்​ஸில் அனை​வரை​யும் தொடர்​புப்படுத்தி இருப்​பது சரி​யான திரைக்​கதை கட்​டமைப்​பு. இயக்​கம் டபிள்​யூ. எஸ்​.​வான் டைக். இவர் ஏற்​கெனவே வில்​லி​யம் பாவல், மிர்னா லாயை வைத்து ‘மன்​ஹாட்​டன் மெலோட்​ரா​மா’ என்ற படத்தை இயக்​கி​யிருக்​கிறார்.

பிரம்​மாண்டம்: ரயில் காட்​சிகள், பார்ட்​டி, கிளை​மாக்ஸ் விருந்து என ஒவ்​வொரு காட்​சி​யிலும் எம்​ஜிஎம் நிறு​வனத்​தின் பிரம்​மாண்ட தயாரிப்​பின் ரிச்​னெஸ் குறை​யாமல் காட்​சிப்​படுத்​தப் பட்​டிருக்​கிறது. ஒளிப்​ப​திவு ஜேம்ஸ் வோங் ஹோவ். கருப்​பு, வெள்​ளைப் படம் என்​றாலும் இருட்​டில் தெரி​யும் நிழல் உரு​வங்​களைக் காட்​டி​யிருக்​கும் விதம் அரு​மை.

இசை வில்​லி​யம் ஏஎக்​ஸ்​டி. பார்ட்டி பாடலைத் தவிர இசை எங்​கும் பிர​தான​மாக இல்​லை. எஃபக்ட்​ஸே, இசைக்​கான பணியை செய்து முடித்​து​விடு​கிறது. நிக் கொலை​யாளியைத் தேடிப்போகும் காட்​சிகளில் காட்​டப்​படும் அமை​தியே டென்​ஷனை ஏற்​படுத்தி விடு​கிறது. வைனன்ட் கொல்​லப்​பட்​டார் என்​பது நாளிதழ்​களில் வெளி​யாகி, மீடி​யா​விலும், மக்​கள் மத்​தி​யிலும் பரவும் காட்​சி​யில் இசை, எடிட்​டிங், ஒளிப்​ப​திவு மூன்​றும் சேர்ந்து நம்மை பரபரப்​பாக்குகின்​றன.

படத்​தில் ‘தின் மேன்’ என்று அழைக்​கப்​படு​கிறவர் இறந்​து​போன வைனன்ட். தின்​மேன் வழக்கை நிக், துப்​பறிந்​த​தால் இதன் பிறகு வந்த பாகங்​களில் அவரே, ‘தின் மேன்’ என்று அழைக்​கப்​பட்டு ‘த தின் மேன் சீரிஸ்’ என்று உரு​வானது. புதிர், காமெடி, ரொமான்ஸ் கலந்த புதிய பாணியை சினிமா வரலாற்​றில் உரு​வாக்​கியது, இந்த சீரிஸ் படங்​கள் தான்! ஏறக்​குறைய 90 வருடங்​கள் கடந்​தா​லும், இந்​தப் படம் இன்​னும் தன் வேகத்தை இழக்​காமல் காலத்தை மீறி, சுவாரஸ்​ய​மாக வாசிக்​கப்​படும் நாவலைப்​ போல​வே, ரசிக்​கப்​படும் படமாக​வும் நிற்​கிறது. ஹாலிவுட்​டின்​ கிளாசிக்​ குற்​றப்​ படங்​களின்​ வரிசை​யில்​ தவறாமல்​ பார்க்​க வேண்​டிய அற்​புதம்​ இது.

(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x