Published : 11 Jul 2025 03:20 PM
Last Updated : 11 Jul 2025 03:20 PM
சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கலாச்சாரம் அமெரிக்காவில் பெரும் பிரபலமாக தொடங்கிய காலம் முதல் இன்று வரை உலகமெங்கும் ரசிகர்கள் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது ‘சூப்பர்மேன்’ தான். இன்று பிரபலமாக இருக்கும் பல சூப்பர்ஹீரோக்களுக்கு முன்னோடியான இந்த கதாபாத்திரத்தை வைத்து 1978 முதல் பல திரைப்படங்கள் வந்துவிட்டன. க்ரிஸ்டோபர் ரீவ் தொடங்கி ஹென்றி கவில் வரை சூப்பர்மேனாக நடித்து புகழ் பெற்றவர்கள் பலர்.
அந்த வரிசையில் தற்போது புதிய சூப்பர்மேனாக களமிறங்கியுள்ள டேவிட் காரன்ஸ்வெட், மார்வெல் படங்களிலிருந்து விலகி டிசி நிறுவனத்தில் இணைந்திருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம்தான் ‘சூப்பர்மேன்’.
இதுவரை வெளியான சூப்பர்மேன் படங்கள், கார்ட்டூன்களிலேயே சூப்பர்மேனின் தோற்றம், அவர் எப்படி பூமிக்கு வந்தார், அவருடைய இளமைப் பருவம் ஆகியவை விலாவரியாக காட்டப்பட்டு விட்டதால் இப்படத்தில் நேரடியாக கதைக்குள் வந்துவிடுகிறார் இயக்குநர் ஜேம்ஸ் கன். சூப்பர்மேன் என்ற ஹீரோ மக்களுக்கு பரிச்சயமாகி 3 ஆண்டுகள் கழித்து படம் தொடங்குகிறது.
சர்வாதிகார நாடான போரேவியாவுக்கும் ஏழ்மையில் தவிக்கும் ஜஹ்ரான்பூர் என்ற நாட்டுக்கும் இடையிலான போரை சூப்பர்மேன் தடுத்து நிறுத்துகிறார். இது போரேவியாவின் நட்பு நாடாக இருக்கும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சூப்பர்மேனின் பரம எதிரி லெக்ஸ் லூதர், சூப்பர்மேனை அழிக்க பல்வேறு உத்திகளை கையாள்கிறார்.
இன்னொரு பக்கம் அண்டார்டிகாவில் இருக்கும் சூப்பர்மேனின் ரகசிய இடத்தை கண்டுபிடித்து அங்கு சூப்பர்மேன் பற்றிய ஒரு ரகசியத்தை மக்களிடையே பரப்புகிறார் லெக்ஸ் லூதர். இதனால் சூப்பர்மேனை நேசித்த மக்கள் அவரை கடுமையாக வெறுக்க தொடங்குகின்றனர். மீண்டும் மக்களின் அன்பை வென்று, தன்னுடைய அடையாளத்தை எப்படி சூப்பர்மேன் மீட்டார் என்பதே படத்தின் திரைக்கதை.
முந்தைய சூப்பர்மேன் படங்களை காட்டிலும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே சமூக வலைதளங்களில் ஏராளமான ட்ரோல்கள், அர்த்தமற்ற விமர்சனங்களும் வெளியாகி வந்தன. காரணம், முந்தைய படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாததால் டிசி/வார்னர் பிரதர்ஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களை முந்தைய படங்களின், குறிப்பாக இயக்குநர் ஸாக் ஸ்னைடர் ரசிகர்கள் விரும்பவில்லை. படம் வெளியாகும் முதல் நாள் வரையிலுமே படம் குறித்தும், இயக்குநர் - நடிகர்கள் குறித்தும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஆனால், அவற்றுக்கெல்லாம் தனது திறன்மிகு திரைக்கதையால் பதிலடி கொடுத்துள்ளார் ஜேம்ஸ் கன்.
டிசி காமிக்ஸில் மிகவும் டார்க் ஆன பின்னணி கொண்ட சூப்பர்ஹீரோ என்றால் அது பேட்மேன் தான். ஆனால் சூப்பர்மேனோ அதற்கு நேர்மாறாக கலர்ஃபுல்லாகவும், கலகலப்பும் நிறைந்த ஒரு காமிக்ஸ். ஆனால் ஸாக் ஸ்னைடர் தன் படங்களில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மிகவும் சீரியஸாக, யாராலும் வீழ்த்த முடியாத ஒரு கடவுளாக காட்டியிருந்தார்.
தற்போது சூப்பர்மேனை அதன் அசல் தன்மையுடன் கலகலப்பான, பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரமாக காண்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஜேம்ஸ் கன். படத்தின் முதல் காட்சியிலேயே சூப்பர்மேன் எதிரிகளால் வீழ்த்தப்படுகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு சூப்பர்மேனின் பலவீனங்கள், உணர்வுரீதியான பக்கங்கள் இதில் அலசப்பட்டுள்ளன.
‘அமுல் பேபி போல முகம் கொண்ட இவர் சூப்பர்மேனா?’ என்ற வசவுகளை தவிடு பொடியாக்கி தன்னுடைய ஆகிருதியான தோற்றம், கவனம் ஈர்க்கும் நடிப்பின் மூலம் சூப்பர்மேனை கண்முன் கொண்டு வருகிறார் டேவிட் காரன்ஸ்வெட். அடுத்த சில வருடங்களுக்குப் பிறகு சூப்பர்மேன் என்றாலே இவர்தான் என்று ஆவதற்கான அத்தனை சாத்தியங்களும் தெரிகின்றன.
படத்தின் குறை என்று பார்த்தால் ஆங்காங்கே வரும் நீள நீள வசனங்கள், எமோஷனல் காட்சிகளில் அழுத்தம் இல்லாதது, முதல் பாதியில் அனைத்தும் அவசரகதியில் நடப்பது போன்ற உணர்வு ஆகியவற்றை சொல்லலாம். குறிப்பாக, எமோஷனல் காட்சிகளை இன்னும் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கலாம். காரணம், ஜேம்ஸ் கன்னின் முந்தைய படமான ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ படத்தில் உயிரற்ற அனிமேஷன் கதாபாத்திரங்களை வைத்தே பார்ப்பவர்களை கண்ணீர் விட வைத்திருந்தார். அப்படியான உணர்வுபூர்வ காட்சிகளை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பு. குறிப்பாக பாக்கெட் யுனிவர்ஸ் என்ற இடத்திலிருந்து சூப்பர்மேன் தப்பித்து வரும் காட்சிகள் அப்ளாஸ் ரகம். போஸ்ட் கிரெடிட் காட்சிகளுக்காக எழுத்து முடியும்வரை அமர்ந்திருந்த ரசிகர்களுக்காக கொஞ்சம் நல்ல காட்சியை வைத்திருக்கலாம். எந்தவித அழுத்தமும் இல்லாத, கடமைக்கு வைக்கப்பட்டதைப் போல அந்தக் காட்சி இருந்தது.
சில குறைகள் இருந்தாலும் டிசி ரசிகர்கள் ஆவலுடன் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கம்பேக் இது என்று நிச்சயமாக சொல்லலாம். இருண்டு கிடந்த டிசி யுனிவர்ஸில் புது வெளிச்சம் பாய்ச்சியதைப் போல இனி வரும் டிசி படங்களுக்கு புதிய கதவுகளை திறந்திருக்கிறார் இந்த ‘சூப்பர்மேன்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT