Published : 27 Jun 2025 05:04 PM
Last Updated : 27 Jun 2025 05:04 PM
‘ட்ரான்’, ‘டாப் கன் மாவெரிக்’ படங்களின் மூலம் ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜோசப் கோசின்கி இயக்கத்தில் ப்ராட் பிட் நடிக்கும் ஸ்போர்ட் டிராமா என்றதுமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அதிலும் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகி பெரிய திரையில் இதன் பிரம்மாண்டத்தை காணும் ஆவலை ரசிகர்களுக்கு தூண்டியது. ‘F1’-ன் அந்த எதிர்பார்ப்புகள் காட்சி ரீதியாக ரசிகர்களை திருப்திபடுத்தியதா?
90-களில் மிகச் சிறந்த எஃப்-1 ரேஸர்களில் ஒருவராக வளர்ந்து கொண்டிருந்த சன்னி ஹேயஸின் (ப்ராட் பிட்) கரியர் ஒரு விபத்துக்குப் பிறகு முடங்கிப் போகிறது. தற்போது ஐம்பதைக் கடந்த வயதில் இருக்கும் அவர், சிறிய அளவிலான பந்தயங்களில் கலந்து கொண்டும் டாக்ஸி டிரைவராகவும் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். தனது முன்னாள் சக ரேஸரும் நண்பருமான ரூபனை சந்திக்கும் சன்னியின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.
அபெக்ஸ் எனப்படும் ஒரு எஃப்-1 ரேஸிங் டீமை ரூபன் தன்னுடைய டீமில் சன்னியை சேர்த்துக் கொள்ள விரும்புகிறார். இதுவரை எந்த போட்டியிலும் ஒரு புள்ளி கூட எடுக்காத தனது டீமை விற்க வேண்டிய நிலையில் இருந்து காப்பாற்ற சன்னியால்தான் முடியும் என்று நம்புகிறார் ரூபன். சன்னியால் ரூபனின் டீமை காப்பாற்ற முடிந்ததா, அதன் பிறகு என்னவானது என்பதே ‘எஃப்-1’ படத்தின் திரைக்கதை.
மற்ற படங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் படங்களுக்கும் இருக்கும் வித்தியாசமே ஸ்போர்ட்ஸ் படங்களில் இதுதான் முடிவாக இருக்கும் என்பது தொடக்கத்திலேயே ஆடியன்ஸுக்கு தெரிந்து விடும். உலக அளவில் பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒரே போன்ற முடிவுதான். ஆனால் அதை ஓர் இயக்குநர் ஆடியன்ஸுக்கு காட்சி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் எப்படி கொண்டு போய் சேர்க்கிறார் என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது. இதற்கு ‘ரேஜிங் புல்’, ‘ராக்கி’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘ஃபோர்ட் vs ஃபெராரி’ வரை உதாரணங்களை சொல்லமுடியும்.
அந்த வரிசையில் நிச்சயமாக ‘எஃப்-1’ படத்தையும் வைக்கலாம். படத்தின் மிகப் பெரிய பலம் அதன் பிரம்மாண்ட ஒளிப்பதிவு. செட், க்ரீன் மேட் போன்றவற்றை பயன்படுத்தாமல் உண்மையான எஃப்-1 சர்க்யூட்டில் தான் ரேஸ் தொடர்பான காட்சிகளை அட்டகாசமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ரேஸிங் காட்சிகளில் இருக்கும் நம்பகத்தன்மைதான் பார்வையாளர்களை மயிர்க்கூச்செரியும் வகையில் உள்ளிழுத்துக் கொள்கிறது.
எல்லா ஸ்போர்ட்ஸ் படங்களையும் போல மிக மிக அடிப்படையான ஒன்லைன் தான் இப்படத்திலும் இயக்குநர் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அதை சுவாரஸ்யமாகவும், எந்த இடத்திலும் நம்மை யோசிக்க விடாதபடி சொன்னதில் ஜெயிக்கிறார். என்னதான் க்ளைமாக்ஸை யூகிக்க முடிந்தாலும் படம் தொடங்கியது முதல் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடியாத படி அமைத்தது சிறப்பு. பெரிய திரையில் ரேஸிங் தொடர்பான காட்சிகளில் வாய் பிளந்து பார்க்க முடியாமல் இருக்க முடியாது. குறிப்பாக க்ளைமாக்ஸ் ரேஸ்.
சன்னி ஹேயஸ் கதாபாத்திரத்தை பிராட் பிட்டை தவிர வேறு யாரும் செய்திருக்க முடியுமா என்று சொல்லும் அளவுக்கு வசீகரமான நடிப்பு. அவரது ‘கேர் ஃப்ரீ’ நடத்தையும், டயலாக் டெலிவரியும் ரசிக்க வைக்கின்றன. இளம் ரேஸராக வரும் டேமன் இத்ரிஸ் சிறப்பான தேர்வு.
ஒளிப்பதிவுக்கு நிகராக படத்தின் சவுண்ட் டிசைனும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ரேஸிங் தொடர்பான காட்சிகளில் இரைச்சல் ஏதுமின்றி துல்லியமான ஒலி அமைப்பு ஆச்சர்யமூட்டுகிறது. ஹான்ஸ் ஜிம்மரின் பின்னணி இசை அவருக்கு மற்றுமொரு மணிமகுடம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பு.
முன்பே குறிப்பிட்டதைப் போல முடிவு இதுதான் என்று தெரிந்து விட்டாலும் கூட ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து பார்க்கக் கூடிய, குறிப்பாக ரேஸிங் காட்சிகளில் வியக்க வைக்க கூடிய ஒரு படம் இந்த ‘எஃப்-1’. நல்ல ஒளி - ஒலி அமைப்பு கொண்ட பெரிய திரையில் பார்த்தால் மறக்க முடியாத திரை அனுபவம் நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT