Published : 03 Mar 2025 10:00 AM
Last Updated : 03 Mar 2025 10:00 AM
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் நோ அதர் லேண்ட் என்ற குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தினை யுவால் ஆப்ரஹாம், பேஸல் அட்ரா, ஹம்தான் பலால் மற்றும் ரேச்சர் ஸோர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் இயக்குநராவார்.
விருது மேடையில் அவர்கள் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்து கவனம் ஈர்த்தனர். காசா போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இயக்குநர் அட்ரா கூறுகையில், “இந்த உலகம் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதி குறித்து தீவிர நடவடிக்கைகளுக்கு முற்பட வேண்டுகிறோம். பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் நான் தந்தையானேன். என் மகளுக்கும் என்னைப்போன்றதொரு வாழ்க்கை அமைந்துவிடக் கூடாது என்று நம்புகிறேன். நோ அதர் லேண்ட் குறும்படம் நாங்கள் எதிர்கொள்ளும் கடினமான வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு, ஆண்டாண்டு காலமாக அதை அனுபவித்துக் கொண்டே எப்படி எதிர்த்தும் போராடுகிறோம் என்பதைக் காட்டுகிறது” என்றார். அட்ரா பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், சமூகநல செயற்பாட்டாளரும் ஆவார்.
படத்தின் இன்னொரு இயக்குநரான ஆப்ரஹாம் கூறுகையில், “இந்தப் படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியுள்ளோம். காரணம் இஸ்ரேல், பாலஸ்தீனமும் இணைந்து குரல் கொடுத்தால் அந்தக் குரல் வலுவானதாக இருக்கும். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். காசா பேரழிவையும், அந்த மக்களின் துயரத்தையும் பார்க்கிறோம். அவர்களின் துயர் முடிவுக்கு வர வேண்டும். அக்டோபரில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
நான் குடிமைச் சட்டத்துக்கு உட்பட்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கிறேன். ஆனால் என்னுடன் இந்தப் படத்தை இயக்கிய பஸேல் ராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கிறார். அது அவர் வாழ்க்கையை சிதைக்கிறது. அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எல்லா பிரச்சினைக்கும் வேறு ஒரு பாதையில் தீர்வு இருக்கிறது. அது அரசியல் தீர்வு. இன ரீதியிலான ஆதிக்க சிந்தைகளை விடுத்து எங்கள் இருநாட்டு மக்களுக்குமான உரிமைகள் வழங்கக்கூடிய தீர்வு அதுவே.” என்றார். ஆப்ரஹாம் இஸ்ரேலிய பத்திரிகையாளர் ஆவார்.
மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை விமர்சித்த ஆப்ரஹான், “நாங்கள் ஒன்றிணைந்து வாழ்வதை ஏன் உங்களால் யோசிக்க முடியவில்லை. எனது மக்கள் பாதுகாப்பாக இருந்தால், பேஸலின் மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக இருப்பார்கள்.” என்றார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன கூட்டணியில் உருவாக்கப்பட்ட நோ அதர் லேண்ட், இஸ்ரேலிய அரசால் புலம்பெயரும் ஒரு பாலஸ்தீனிய குடும்பத்தைப் பற்றிய கதையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT