Published : 13 Feb 2018 03:26 PM
Last Updated : 13 Feb 2018 03:26 PM
அடுத்து உருவாகவிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் நாவல், கேஸினோ ராயல் கதையின் முன் கதையாக (prequel) இருக்கும் என்று தெரிகிறது.
ஹாலிவுட்டிலிருந்து வரும் பட வரிசைகளில் முக்கியமான பட வரிசை ஜேம்ஸ்பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் அவ்வபோது மாறினாலும் அந்த கதாபாத்திரத்தின் புகழ் என்றும் குறைந்ததில்லை. இயன் ஃப்ளெமிங் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளரின் படைப்பான இந்த கதாபாத்திரம் 1953 ஆம் ஆண்டு 'கேஸினோ ராயல்' என்ற கதையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த கதை தொலைக்காட்சி தொடராகவும் உருவானது. 1962ல் தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியானது.
ஏற்கனவே 'கேஸினோ ராயல்' கதை 1967ல் ஒரு முறையும், 2006ல் ஒரு முறையும் ஜேம்ஸ் பாண்ட் படங்களாக உருவாகியுள்ளது. தற்போது, அடுத்த ஜேம்ஸ் பாண்ட் கதை, கேஸினோ ராயலின் முன் கதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவலின் பெயர் 'ஃபாரெவர் அண்ட் எ டே' (Forever and a Day) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எழுத்தாளர் ஹோரோவிட்ஸ்.
இயன் ஃப்ளெமிங் மறைவுக்குப் பின் ஹோரோவிட்ஸ்தான் பாண்ட் கதாபாத்திரத்தை வைத்து நாவல் எழுதியுள்ளார். அவர் எழுதும் இரண்டாவது நாவல் இது. இவரது முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல் 2015ல் வெளியான 'ட்ரிக்கர் மார்டிஸ்'. இது கோல்ட் ஃபிங்கர் கதாபாத்திரத்தை பாண்ட் எதிர்கொள்வது போல அமைக்கப்பட்டிருந்தது.
'மார்ஸே தண்ணீரில் ஜேம்ஸ் பாண்டின் உடல் மிதந்து கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாதவர்களால் அவர் கொல்லப்பட்டுள்ளார். புது ஜேம்ஸ் பாண்டுக்கான நேரம் வந்துவிட்டது' என்ற குறிப்போடு இந்த நாவல் தொடங்குகிறது. தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் எப்படி தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்பதையும், ஃப்ளெமிங் எழுதி வெளிவராத சில கதைகளையும் இந்த நாவலில் தெரிந்து கொள்ளலாம்.
'ஃபாரெவர் அண்ட் எ டே' புத்தகம் மே 31-ஆம் தேதி பிரிட்டனிலும், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT