Published : 24 Jan 2024 08:01 PM
Last Updated : 24 Jan 2024 08:01 PM
கொச்சி: ‘பார்பி’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மார்கோட் ராபியும், படத்தின் இயக்குநரும் ஆஸ்கர் நாமினேஷனில் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக ரியான் கோஸ்லிங் குரல் கொடுத்திருக்கும் நிலையில் நடிகை பார்வதி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பரிந்துரைப் பட்டியல் நேற்று (ஜன.23) வெளியிடப்பட்டது. இதில் சிறந்த உறுதுணை நடிகருக்கான பிரிவில் ‘பார்பி’ ஹாலிவுட் படத்துக்காக ரியான் கோஸ்லிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ‘பார்பி’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மார்கோட் ராபி மற்றும் படத்தின் இயக்குநர் கிரேட்டா கெர்விக் இருவரும் ஆஸ்கர் விருது நாமினேஷனில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ரியான் கோஸ்லிங், “சிறந்த படங்கள் வெளியான இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் நானும் இடம்பெற்றிருப்பது பெருமையளிக்கிறது. கேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு இத்தகைய பெருமை கிடைத்திருப்பதை நம்பமுடியவில்லை. அதே சமயம் ‘பார்பி’ இல்லாமல் கேன் இல்லை. கிரெட்டா கெர்விக் மற்றும் மார்கோட் ராபி இல்லாமல் பார்பி திரைப்படமே இல்லை.
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரலாறு படைத்த இப்படத்தின் புகழுக்கு பொறுப்பானவர்கள் இவர்கள் இருவரும். ஆனால் இருவரும் நாமினேஷனில் அந்தந்த பிரிவுகளில் பரிந்துரைக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. தகுதியான மற்றவர்களுடன் இவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ரியானின் இந்த அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை பார்வதி திருவொத்து, “இது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. காரணம் இங்கே ரியான் கோஸ்லிங்குகள் யாரும் இருப்பதில்லை. இங்கே திறமையோ, பங்களிப்போ முக்கியமாக கருதப்படுவதில்லை. தங்கள் மதிப்பை உணர்ந்து பேசும் பெண்கள் தொற்று நோய்களைப்போல தவிர்க்கப்படுகின்றனர். காரணம் சமத்துவமின்மைக்கு சவால் விடப்பட்டால் அவர்கள் வேறு எப்படிப் பயனடைவார்கள். ஆனால், உண்மையிலேயே தகுதியானவர்களை உயர்த்துவதற்கு தங்கள் சக்தியையும் குரலையும் பயன்படுத்தும் நண்பர்கள் இருப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT