Published : 24 Jan 2024 11:37 AM
Last Updated : 24 Jan 2024 11:37 AM
லாஸ் ஏஞ்சல்ஸ்: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓபன்ஹெய்மர்’ படம் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
இதில் சிறந்த இயக்குநருக்கான பிரிவில், கிறிஸ்டோஃபர் நோலன் (ஓபன்ஹெய்மர்), மார்ட்டின் ஸ்கோர்செஸி (கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்), யோர்கோஸ் லாந்திமோஸ் (புவர் திங்க்ஸ்), ஜொனாதன் கிளேசர் (தி ஜோன் ஆஃப் இன்டர்ஸ்ட்), ஜஸ்டின் ட்ரைட் (அனாடமி ஆஃப் எ ஃபால்) ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அதிக முறை சிறந்த இயக்குநர் பிரிவில் நாமினேட் செய்யப்பட்ட ஒரே இயக்குநர் என்ற பெருமையை 81 வயது மார்ட்டின் ஸ்கார்ஸெஸி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 9 முறை நாமினேட் செய்யப்பட்டு இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் முன்னிலையில் இருந்தார். தற்போது அந்த சாதனையை ஸ்கார்ஸெஸி முறியடித்துள்ளார்.
இந்த பிரிவில் 2006ஆம் ஆண்டு ‘தி டிபார்டட்’ படத்துக்காக ஒருமுறை மட்டுமே ஸ்கார்ஸெஸி சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இந்தப் பிரிவில், ஸ்கார்ஸிக்கு அடுத்தபடியாக, இயக்குநர்கள் ஸ்பீல்பெர்க் (9), வில்லியம் வைலர் (8), பில்லி வைல்டர் (8), உடி ஆலன் (7), டேவின் லீன் (7), ஃப்ராங்க் காப்ரா (6), ஜான் ஃபோர்டு (5), ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் (5), ஃப்ரான்ஸின் ஃபோர்டு கொப்போலா (4), க்ளின்ட் ஈஸ்ட்வுட் (4), ஸ்டான்லி குப்ரிக் (4) ஆகியோர் உள்ளனர்.
ஸ்கார்ஸெஸி இயக்கிய ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர் ஆகிய பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT