Published : 01 May 2016 12:11 PM
Last Updated : 01 May 2016 12:11 PM

ரூ. 101 கோடி நஷ்டஈடு கேட்டு ஷாரூக்கானின் ‘ரயீஸ்’ படத்துக்கு எதிராக வழக்கு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ‘ரயீஸ்’ என்ற படம் உருவாகி வருகிறது. குஜராத்தில் 1980-களில் கள்ளச்சாரய தொழிலில் ஈடுபட்டு, தாதாவாக மாறிய அப்துல் லத்தீப் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படம் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை வெளியிடவும் விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க கோரி, தாதா அப்துல் லத்தீபின் மகன் முஸ்தாக் அகமது அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், “இந்தப் படத்தின் திரைக்கதை ஆய்வு செய்யப்பட்டபோது, எங்கள் குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்தனர். எனது தந்தையின் வாழ்க்கைதான் படமாக எடுக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாதி, எனது தந்தைக்கு மிகுந்த அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் எங்கள் குடும்பத்தின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக ரூ.101 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இம்மனு நீதிபதி ஆர்.டி.வாஸ்தானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட், இணை தயாரிப்பு நிறுவனங்

களான எக்ஸெல் என்டெர்டைன்மென்ட், ராகுல் தோலக்கியா புரொடக் ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மே 11-க்குள் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குஜராத் மதுவிலக்கால் உருவான அப்துல் லத்தீப்

ஆர்.ஷபிமுன்னா

அப்துல் லத்தீப் சிறுவனாக இருந்தபோது, கடந்த 1970-களில் மகாராஷ்டிரத்தில் இருந்து குஜராத்தின் அகமதாபாத்துக்கு சிறிய அளவில் வெளிநாட்டு வகை மது புட்டிகளை கடத்தி வந்தார். இதன் வளர்ச்சியாக கள்ளச்சாராய உற்பத்தியிலும் இறங்கிய லத்தீப், அவற்றின் விற்பனைக்காக சூதாட்ட கிளப்புகளையும் தொடங்கினார். இதை தனது பருவ வயதில் தொடங்கிய லத்தீப், அங்கு பணம் தராமல் போதையில் கலாட்டா செய்பவர்களை உதைத்து பணம் வசூல் செய்யத் தொடங்கினார். இதனால் மெல்ல மெல்ல உள்ளூர் தாதாவாக உருவானார்.

அப்போது மும்பையின் மூத்த தாதாக்களான கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோர் பற்றி திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. இதைப்பார்த்து உற்சாகம் அடைந்த லத்தீப், அவர்கள் பாணியிலேயே பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யத் தொடங்கினார். குறிப்பாக அகமதாபாத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்தார். 1980-களில் குஜராத்தில் மதக்கலவரங்கள் நடந்தபோது இந்தச் சேவை அதிகமானது. இதனால் கிடைத்த பேரும் புகழும் லத்தீப்பை அரசியலில் நுழைய வைத்தது. அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் இவர், ஒரே சமயத்தில் ஐந்து வார்டுகளில் போட்டியிட்டு, ஐந்திலும் வெற்றிபெற்று சாதனை படைத்தார். இதனால் லத்தீப் முதல்முறையாக குஜராத்துக்கு வெளியேயும் பேசப்பட்டார்.

இந்த செல்வாக்கு அவருக்கு அரசியல் எதிரிகளை உருவாக்கியது. இதையடுத்து தலைமறைவான லத்தீபை டெல்லியில் 1995-ல் குஜராத் போலீஸார் கைது செய்தனர். பிறகு குஜராத்தின் சபர்மதி சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார்.

1997-ல் நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் போது லத்தீப் தப்பி ஓட முயன்றதாக என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அப்போது, குஜராத்தில் சங்கர் சிங் வகேலா முதல்வராக இருந்தார். அவரது உத்தரவின் பேரிலேயே என்கவுன்ட்டர் நடந்ததாக லத்தீப் மகன்கன் கருதினர்.

எனவே இன்றும் வகேலாவுக்கு எதிரான இவர்களின் அரசியல் விரோதம் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x